இணைந்திருந்தால்.. .. நிலைத்திருந்தால் .. .. கேட்பதெல்லாம் நடக்கும்
வாழ்க்கை என்பது கனி நிறைந்த வாழ்வாக இருக்க வேண்டும். இந்த கனி தரும் வாழ்வு என்பது, நமக்குள் நிறைவையும் நிம்மதியையும் தருவது. பிறருக்கு பயன்படக்கூடியது. இறைவனுக்கு மகிமை சேர்ப்பது. ஒருவன் வாழ்ந்ததன் பயன் இதுதான். இத்தகைய கனி தரும் வாழ்க்கையை வாழ, ஒருவன் இறைவனோடு இணைந்திருக்க வேண்டும். இக் கருத்தை இயேசு இப்பகுதியில் பலமுறை உணர்த்துகிறார். ‘இணைந்திருத்தல்’ , ‘நிலைத்திருத்தல்’ என்னும் வார்த்தைகளை இதற்கென பலமுறை பயன்படுத்துகிறார். “இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது”. “இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்”. “என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது”. “நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.” இவ்வசனங்கள் இதற்குச் சான்றுகள்.
இயேசுவோடு இணைந்திருப்பதன் நெருக்கம் பல பலன்களைக் கொடுக்கவல்லது. இயேசுவை விட்டுக் கொஞ்சம் விலகினாலும் அந்த இழப்பு, கொஞ்சம் அல்ல. மிக மிகப் பெரிது. “என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது” கொஞ்சம்தானே இயேசுவை விட்டு விலகியிருக்கறேன். ஆகவே கொஞ்சம்தானே நஷ்டம் என்ற கணக்கு, ஆன்மீகத்தில் தப்புக்கணக்கு. இயேசுவை விட்டு கொஞ்சம் விலகினாலே நாம் எல்லாவற்றையும் நஷ்டமடைந்துவிடுவோம்.
அதே வேளையில், நாம் இயேசுவோடு இருந்தால், “விரும்பிக் கேட்டதெல்லாம் கிடைக்கும்”. இயேசுவோடு நெருக்கமாக இருந்துகொள்ளுங்கள். செடியும் கிளையுமாக, கிளையும் கொடியுமாக. இணை பிரியாத இந்த நெருக்கம் மிகுந்த பலனைத் தரும். கனி கொடுக்கும். இணைந்து இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.
–அருட்திரு ஜோசப் லியோன்