இடைவிடாத செபம் கேட்கப்படும்
இன்றைய நற்செய்தியில் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8) வருகிற நடுவர் ஏரோதாலோ, அல்லது உரோமையர்களாலோ நியமிக்கப்பட்ட நடுவர். பணம் இருந்தால், எதையும் செய்யலாம் என்பதாகத்தான், இந்த நடுவர்கள் செயல்பட்டனர். நீதிக்கு அங்கே இடமில்லை. எந்த அளவுக்கு பணத்தை வாறி இறைக்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு நாம் விரும்பியபடி நீதி கிடைக்கும். நீதி, நியாயத்தைப்பற்றி அங்கு யாரும் பேசமுடியாது. பணம்தான் எல்லாம் செய்யும்.
இங்கே நற்செய்தியில் குறிப்பிடப்படுகிற பெண் ஏழைகளை, எளியவர்களை அடையாளப்படுத்தும் பெண். பணத்தினால் நிச்சயம் அவர்களுக்கு நீதி கிடைக்காது. ஏனென்றால் அவர்களால் பணம் கொடுக்க முடியாது. ஆனாலும், அந்த பெண் நீதியை பெற்றிட பிடிவாதமாய் இருக்கிறாள். எப்படியாவது, நீதி கிடைத்திட தொடர்ந்து அவள் நச்சரிக்கிறாள். நச்சரிப்பின் காரணமாக, அவள் நீதியைப்பெறுகிறாள். இயேசுவின் செய்தி இதுதான்: பணத்திற்கா விலைபோகிற நேர்மையற்ற நடுவரே இப்படி இருந்தால், நம்மைப்படைத்துப்பாதுகாத்துவரும் கடவுள் நம்மை அவ்வளவு எளிதில் கைவிட்டு விடுவாரா? நிச்சயம் நம்மைக்காப்பார். நமது சார்பில் அவர் என்றும் இருப்பார். நம்மை வழிநடத்துவார். நம்மோடு எந்நாளும் அவர் பயணிப்பார்.
கடவுளிடத்தில் செபிக்கின்றபோது, எப்போதும் நாம் மனம் உடைந்துவிடக்கூடாது. நாம் கேட்பது கிடைக்கவேண்டிய நேரத்தில் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். செபத்திலே நாம் நினைத்தது கேட்கப்படவில்லை என்பதால் நாம் சோர்ந்துவிடக்கூடாது. உறுதியாக, நம்பிக்கையோடு, விடாமுயற்சியோடு கேட்க வேண்டும்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்