இடுக்கமான வாயில் !
இயேசுவின் போதனைகள் எளிதானவை அல்ல. அவை நம்மை மலர்த் தோட்டத்திற்கு இட்டுச் செல்வதில்லை. மாறாக, சிலுவைப் பாதைக்கு அழைக்கின்றன. இறைவார்த்தையை இன்று ஒரு சிலர் அற்புதங்கள், அருங்குறிகள், குணமாக்குதல் நடத்தும் கருவியாக மட்டுமே பார்ப்பது வேதனையாக இருக்கிறது. இறைவார்த்தை நமக்கு நலமும், ஆறுதலும் தருவதுபோலவே, நம்மை அறைகூவலுக்கும், சவாலுக்கும் அழைக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இயேசுவின் போதனைகள் பலவும் கடினமானவை. எனவேதான், இடுக்கமான வாயில் வழியே நுழையப் பாடுபடுங்கள் என இன்றைய வாசகம் வழியாக நாம் நினைவூட்டப்படுகிறோம்.
ஆனால், இந்த இடுக்கமான வாயில் வழியே நமக்கு முன்னால், இயேசுவும் அவரைத் தொடர்ந்து ஏராளமான புனிதர்களும், மறைசாட்சிகளும் பயணம் செய்திருக்கிறார்கள் என்பது நமக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது. எனவே, நாமும் அவர்களைப் பின் தொடர்ந்து, சவால்கள் நிறைந்த, இடுக்கமான இறைவார்த்தைப் பாதையில் பயணம் செய்வோம்.
மன்றாடுவோம்: ஒப்பற்ற செல்வமான இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறோம். உம்முடைய போதனைகள் கடினமாக இருக்கின்றன என்று நாங்கள் மனம் தளர்ந்துவிடாமல், நீர் தருகின்ற ஆற்றலில் நம்பிக்கை கொண்டு உம்மைப் பின்பற்றும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
–அருள்தந்தை குமார்ராஜா