ஆலயம் – ஆறுதல் தரும் இறைப்பிரசன்னம்
இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்துக்கொண்டு ஓர் உயர்ந்த மலைக்குச்சென்றார். இயேசு எதற்காக உயர்ந்த மலைக்குச்செல்ல வேண்டும்? மலையின் மகத்துவம் என்ன? மலையில் இஸ்ரயேல் மக்களின் சிறந்த இறைவாக்கினர்களான மோசேயும், எலியாவும் தோன்றுவதன் பொருள் என்ன? இவற்றுக்கான பதிலை இப்போது பார்ப்போம். இயேசு தன் பாடுகளை முதன்முதலாக முன்னறிவித்தவுடன் மலைக்குச்செல்கிறார். அதாவது, தான் பாடுகள் படப்போவதையும், கொலை செய்யப்படப்போவதையும் அறிவித்த இயேசு மலைக்குச்செல்கிறார். இயேசு தான் பாடுகள் படப்போவதைத் துணிவோடு அறிவித்தாலும் கூட, அவருடைய உள்ளம் கலக்கமுற்றிருக்கிறது. இயேசு கவலையினால் தன் மனித உணர்வுகளிலே சோர்ந்து போயிருக்கிறார். இத்தகைய தருணத்திலே அவருக்கு ஆறுதல் தேவையாயிருக்கிறது. அந்த ஆறுதலைத்தேடி அவர் மலைக்குச்செல்கிறார்.
மலை என்பது கடவுளை சந்திக்கிற இடமாக இஸ்ரயேல் மக்கள் நம்பினர். மலை என்பது கடவுள் அனுபவம் பெறக்கூடிய இடம். விடுதலைப்பயணம் 31: 18 ல், மோசே ஆண்டவரோடு சீனாய் மலையில் பேசுவதைப்பார்க்கிறோம். ஆண்டவர் சீனாய்மலைமேல் மோசேயோடு பேசிமுடித்தபின், கடவுளின் விரலால் எழுதப்பட்ட கற்பலகைகளான உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும், மோசேயிடம் கொடுக்கிறார். அதேபோல் 1அரசர்கள் 19: 8 – 12 ல் பார்க்கிறோம். எலியா ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தபிறகு, அதில் இரவைக் கழிக்கிறார். அங்கே அமைதியான ஒலியில் கடவுளின் பிரசன்னத்தை உணர்கிறார். அதாவது, மலை என்பது இறைவனை சந்திக்கிற இடமாகவும், இறைவனின் தரிசனம் கிடைக்கின்ற இடமாகவும் விளங்குவதை மேற்கூறிய இரண்டு பகுதிகளும் வலியுறுத்திக்கூறுகிறது. ஆக, மலையிலே இயேசு இறைத்தந்தையின் பிரசன்னத்திற்காக, இறைத்தந்தையோடு இறைவேண்டலில் உரையாடுவதற்காகச் சென்றிருக்கிறார். அவர் இறைத்தந்தையோடு ஒன்றித்திருந்ததின் அடையாளம் தான் அவருடைய முகம் கதிரவனைப்போல ஒளிர்ந்த அடையாளம். ஏனென்றால், மோசேயும் இதே அடையாளத்தை, கடவுளை தரிசித்த அந்த நேரத்திலே பெற்றிருந்தார். விடுதலைப்பயனம் 31: 18 சொல்கிறது: மோசே கடவுளோடு பேசியதால் அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்தது.
எவ்வாறு மலை இறைப்பிரசன்னத்தை வெளிப்படுத்தியதோ, அதேபோல் இன்றைக்கு ஆலயங்கள் அனைத்தும் இறைப்பிரசன்னத்தை தாங்கியிருக்கும் அடையாளங்கள். கடவுள் தூணிலும் இருக்கிறாh, துரும்பிலும் இருக்கிறார். பின் ஏன் கோயிலுக்குச்செல்ல வேண்டும்? என்று கேட்கும் விதண்டாவாதிகளுக்கு சவுக்கடி தருகிற பகுதி இயேசுவின் தோற்றம் மாறுகிற பகுதி. இறைவன் வாழும் இடம் ஆலயம். ஆலயத்தை நாடிச் செல்கின்றபோது, இயேசுவுக்கு ஆறுதல் கொடுத்த கடவுளின் பிரசன்னம், நமக்கும் ஆறுதலைத்தரும்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்