ஆலயமும், வழிபாடும்
ஆலயம் எதற்காக இருக்கிறது? வழிபாட்டின் உண்மையான அர்த்தம் என்ன? ஆன்மீகம் வளர நமது வாழ்வை நாம் எப்படி அணுக வேண்டும்? இப்படிப்பட்ட கேள்விகளோடு, இன்றைய ஆலயங்களை, வழிபாட்டை, ஆன்மீகத்தை நாம் சிந்தித்துப் பார்த்தால், நமக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சும். காரணம், இன்றைய உலகில், பல ஆலயங்களில் ஆண்டவரை, கூவிக்கூவி வியாபாரம் செய்துகொண்டிருக்கிறோம். திருத்தலங்களைச் சுற்றுலாத்தலங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். எப்படியாவது வருவாயைப் பெருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், வழிபாடுகளை அதிகரித்துக் கொண்டிருக்கிறோம். இறைவனையும், அவர் சார்ந்த இடங்களையும் கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆண்டவரை அனைவரும் அறிய வேண்டும் என்பதை விட, ஆலய வியாபாரம் பெருக வேண்டும் என்பதுதான், இன்றைய ஆலய பொறுப்பாளர்களின் ஆதங்கமாக இருக்கிறது.
இன்றைக்கு நமது தமிழக திருச்சபையில் எத்தனையோ திருத்தலங்கள் இருக்கிறது.(கிட்டத்தட்ட சாதாரண ஆலயங்களையே பார்க்க முடியாத நிலையில், கிளைப்பங்குகளும் திருத்தலமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது). இந்த திருத்தலங்களில் இருக்கிற பொறுப்பாளர்களில் எத்தனைபேர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? அதை விடுங்கள். எத்தனைபேர் ஞாயிற்றுக்கிழமை திருப்பலியிலாவது கலந்து கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். குருக்களை கடவுளின் ஊழியர்களாக நம்பக்கூடியவர்கள். கடவுளுக்கு பயந்து வாழக்கூடியவர்கள். குருக்கள் மட்டில் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறவர்கள். இருந்தால், நிச்சயம் ஆச்சரியம், அதிசயம். ஆனால், இவர்களைத்தான், நாமும்(நானும்) அங்கீகரிக்க வேண்டியிருக்கிறது. இவர்களை வைத்துதான் கடவுளின் ஆசீரை(?) மக்களுக்குப் பெற்றுத்தர வேண்டியிருக்கிறது. இவர்களை வைத்து தான், மக்களை ஆன்மீகத்தில்(?) கட்டி எழுப்ப வேண்டியிருக்கிறது. உண்மையில் கடவுள் இதனை விரும்புவாரா? நாம் நம்மையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோமா? இன்றைக்கு இயேசு நமது திருத்தலங்களுக்கு வந்தால், ”என் தந்தையின் ஆலயத்தை, கள்வர் குகையாக்கி விட்டீர்களே?” என்று, நம்மை சாட்டையால் அடித்து விளாச மாட்டாரா? என்ற கேள்விகள் எல்லாம், நிச்சயம் நம்முள் எழாமல் இல்லை.
இந்த அடிப்படைப் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு தான் என்ன? இதனை நாம் எப்படித்தான் சரியான வழியில் நடத்தப்போகிறோம்? நம் கண்ணுக்கு எட்டிய தொலைவில், இதனை விட இன்னும் மோசமாகத்தான் செல்லும், என்கிற எண்ணம் இருக்கிறதே தவிர, நம்பிக்கைக்கு வாய்ப்பே இல்லை. ஆனால், இந்த வரலாற்றை திருப்பிப்பார்த்தால், குறிப்பாக, இஸ்ரயேல் மக்களின் கடவுள் அனுபவ வரலாற்றில், இதனைவிட சோதனையான கட்டங்களை எல்லாம், அவர்கள் தாண்டி வந்திருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், கடவுளின் பணியாளர்களாக இருக்கிற நாம், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும். எது சரியோ? எது தவறோ? அதனை நேர்மையான உள்ளத்தோடு உரைத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், இது நம்முடைய பணி அல்ல, கடவுளின் பணி. நம்மில் அதனை தொடங்கி வைத்த அவரே, அதனை நிறைவும் செய்வார்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்