ஆலயத்தில் இனி இது வேண்டாம்
லூக்கா 19:45-48
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
அன்புமிக்கவர்களே! என் இல்லம் இறைவேண்டலின் வீடு என்பதை சுட்டிக்காட்டி நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆலயத்தை சுத்தப்படுத்தியதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு தருகிறது. ஆலயம் கடவுள் உறையும் புனிதமான இடம். அந்த இடத்தை புனிதமாக வைக்க வேண்டும். புனிதமான இடத்தில் செல்லும் நாம் புனிதமானவர்களாக மாற வேண்டும் என்ற அழைப்பை தருவதோடு நாம் ஆலயத்தில் இனி செய்ய கூடாத இரண்டு செயல்களை பற்றியும் இன்றைய வழிபாடு பேசுகிறது.
1. பேசுதல்
ஆயலயத்தில் வெளியே இருக்கும்போது பேச ஆசை இல்லாத பலர் ஆலயத்தின் உள்ளே வந்ததும் அருகிலிருப்பரிடம் பேச துடிக்கிறார்கள். பல நேரங்களில் மிகவும் சத்தமாக பேசும் நபர்களும் நம்மிடம் தான் இருக்கிறார்கள். இவர்கள் செய்யும் செயல் என்ன? ஆலயம் என்பது அமைதியான இடம். அந்த அமைதியை இழக்கச் செய்வது இவர்கள் தானே? குழந்தைகளுக்கு உதாரணமாக இல்லாமல் தடையாக இருப்பது இவர்கள் தானே? அன்பானவர்களே! இனி இப்படி செய்யாதீர்கள். இது வேண்டாம்.
2. பார்த்தல்
பராக்கு பார்த்தல் என்பது நல்லதா? மிகவும் மோசமானது. ஆண்டவரிடம் பேச வந்த நாம் மற்ற நபர்களை, பொருட்களை பார்த்து நம் ஆன்மீகத்தை இழக்காமல் இருக்க வேண்டும். அப்டி இழந்தால் ஆயலத்தில் வருவது அர்த்தம் இல்லாமல் போகும். இப்படி நாம் செய்யும் போது மற்றவர் ஆன்மீகத்திற்கு நாம் தடையாக இருக்கிறோம். இது களையப்ட வேண்டும். அன்பானவர்களே! இனி இப்படி செய்யாதீர்கள். இது வேண்டாம்.
மனதில் கேட்க…
1. ஆலயத்தில் நான் செய்யும் தவறுகள் என்னென்ன? இது சரியா?
2. பிறர் ஆன்மீகத்திற்கு நான் தடையாக இருந்திருக்கிறேனா?
மனதில் பதிக்க…
என் இல்லம் இறைவேண்டலின் வீடு. நீங்கள் இதைக் கள்வர் குகையாக்காதீர்கள் (லூக் 19:46)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா