ஆறுதலின் இறைவன்
நமது வாழ்வில் துன்பங்கள் வருகிறபோது, நம்மோடு இருந்து, நமக்கு ஆறுதலைத் தரக்கூடியவராக நம் இறைவன் இருக்கிறார் என்பதை, இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு கற்றுத்தருகிறது. நமது இறைவன் ஆறுதலின் தேவனாக இருக்கிறார். ஆறுதல் என்றால் என்ன? ஆறுதல் யாருக்குத்தேவை? மத்தேயு 5: 4 சொல்கிறது: ”துயருறுவோர் பேறுபெற்றோர்: ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்”. யாரெல்லாம் துயரத்தில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு இறைவன் ஆறுதலைத் தரக்கூடிய தேவனாக இருக்கிறார்.
இறைவன் மூன்று வழிகளில் தனது ஆறுதலை வெளிப்படுத்துகிறார். முதலாவது, தனது வார்த்தையின் வடிவத்தில் ஆறுதலை வெளிப்படுத்துகிறார். யோவான் நற்செய்தியில் இயேசு சிலுவையில் இருக்கிறபோது, மரியாவுக்கும், அவருடைய அன்புச்சீடருக்கும் மிகப்பெரிய துன்பம். மரியாவுக்கு மகனை இழக்கிற வேதனை. யோவானுக்கு தன்னுடைய குருவை, வழிகாட்டியை இழக்கிற கொடுமை. அந்த நேரத்தில், “இதோ உன் தாய், இதோ உன் மகன்” என்ற இயேசுவின் வார்த்தைகள் இரண்டுபேருக்குமே ஆறுதலைத் தருகின்றன. இரண்டாவது, தனது உடனிருப்பின் வழியாக இறைவன் மக்களுக்கு ஆறுதலாக இருக்கிறார். இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து பாலைவனத்தின் வழியாக, இறைவனால் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு வருகிறபோது, இறைவன் அவர்களோடு இருக்கிறார். அவர்களின் துன்பங்களில் ஆறுதல் தரக்கூடியவராக இருக்கிறார். மூன்றாவதாக, நற்செயல்கள் மூலமாக இறைவன் ஆறுதல் அளிக்கிறார். நயீன் நகர கைம்பெண்ணின் ஒரே மகன் இறந்து போய்விட்டான். துயர மிகுதியால் அவள் அழுதுகொண்டிருக்கிறாள். தனது ஒரே ஆதரவு, ஆறுதல் போய்விட்டதே என்று கவலை கொள்கிறாள். இறைவன் அவளுடைய மகனை மீட்டுத்தருகிறார்.
விவிலியம் முழுவதுமே இறைவன் ஆறுதலின் இறைவனாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர் ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை. தொடர்ந்து நம்மோடு இருக்கிறார். நம்மை வழிநடத்துகிறார். நம்மில் ஒருவராக இருந்து செயலாற்றுகிறார். நமக்கு ஆறுதலைத் தருகிறார்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்