ஆர்வம் ஆசீரைத் தரும்
ஒரு நோ்காணலில் கெவின் கோ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரங்கநாதன் இவ்வாறு கூறினார், “நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற வேலைகள் எதுவுமே உங்களின் முழு ஆர்வத்தோடு நடக்கவில்லையென்றால் நீங்கள் தேடிக் கொண்டிருப்பது இதுவல்ல. முதலில் உங்களுக்குத் தேவையானதை கண்டுபிடியுங்கள்”. அதுபோல மார்டின் லூதர் கிங் சொன்ன வார்த்தையையும் நாம் சற்று உள்ளுணர்ந்து பார்க்கலாம். “எதுவுமே செய்வதற்கு தகுதியான வேலை தான். அதை ஆர்வத்தோடு செய்யும்போது நீ தெருவைச் சுத்தம் செய்கிறவனாக இருந்தாலும், அதை ஆர்வத்தோடு செய். சுத்தமாக இருக்கும் தெரு உன்னைக் கவனிக்க வைக்கும். உன்னைப் பற்றி பேச வைக்கும்” என்பார். இன்றைய உலகில் சாதனையாளர்களாக அறியப்படக் கூடியவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒருமுறை வாசித்துப் பார்த்தோமென்றால், அவர்களிடம் தாங்கள் மேற்கொண்ட முயற்சியில் ஆர்வமில்லாமல் இருக்காது. ஆர்வம் தான் சாதாரண மனிதர்களை சாதனையாளர்களாக, சரித்திரத்தில் இடம் பிடிக்கின்ற மனிதர்களாக மாற்றியிருக்கிறது.
அத்தகைய ஒரு ஆர்வத்தைத் தான் இன்றையய நற்செய்தி வாசகத்தில் வரும் முடக்குவாதமுற்ற மனிதரிடமும் நாம் பார்க்கின்றோம். கப்பர்நாகும் என்பது ஒரு ஒதுக்கப்பட்ட கடற்கரை கிராமம். விவிலிய பேராசிரியர்கள் இயேசுவின் பணி வாழ்வுக்கு மையமாக கப்பர்நாகும் செயல்பட்டதாக கூறுவர். இயேசு இங்கு தான் பலருடைய நோய்களை குணமாக்கினார். இயேசு தன் பணிவாழ்வில் செய்த முதல் புதுமைக்கு (கானாவூர் திருமணம்) பிறகு கப்பர்நாகுமில் தான் தங்கியிருந்தார். அது மட்டுமில்லாமல் தன் பணி வாழ்வுக்கு முதல் சீடர்களை இங்கு தான் தோ்வு செய்கின்றார். இத்தகைய பண்புமிக்க ஊர் கப்பர்நாகும். அதனால் தான் எதிலும் ஆர்வம் கொண்டவர்களாக விளங்கினார்கள். அத்தகைய ஆர்வம் இந்த முடக்குவாதமுற்றவனிடம் காணப்படுகிறது. எல்லா தடைகளையும் தகர்த்து, ஆர்வத்தோடு இயேசு முன்பு செல்கின்றான். அவனின் ஆர்வம் முடங்கிப் போய் இருந்த எலும்புக்கு முந்தி செல்லக்கூடிய வலுவினை பரிசாக கொடுக்கப்பட்டது.
நமது வாழ்வில் இயேசுவைக் காண இத்தகைய ஆர்வம் இருக்கிறதா? நாம் கடமைக்காக இயேசுவை காண வருகிறோமா அல்லது ஆர்வத்தோடு வருகிறோமா? ஆர்வத்தோடு வரும்போது தள்ளாடிய கால்கள் நேராக்கப்படும். சிந்திப்போம்.
– அருட்பணி. பிரதாப்