ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழுங்கள்
திருப்பாடல் 47: 1 – 2, 5 – 6, 7 – 8
இது வெற்றியின் பாடல். வெற்றியின் களிப்பில் வெளிப்பட்ட பாடல். உடல், உள்ளம், ஆன்மா அனைத்தும் களைப்பில் இருந்தாலும், களிப்பை வெளிப்படுத்தும் பாடல். அரசர் ஒருவர் தான் போரில் பெற்ற வெற்றியை இங்கே வெளிப்படுத்துகிறார். கை தட்டி ஆர்ப்பரியுங்கள் என்று சொல்லக்கூடிய வார்த்தைகள், உள்ளத்தில் இருக்கிற மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது.
ஆரவார ஒலியிடையே பவனி செல்கிறார் என்பது அரியணைக்கு ஏறக்கூடிய காட்சியைக் குறிக்கிறது. அரசர் அரியணையில் அமர்கிறபோது, அனைவருமே மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அரசரை வாழ்த்துவார்கள். இப்போது கூட, முக்கியமான பதவியில் இருக்கிறவர்கள், தாங்கள் பதவி ஏற்கிறபோது, அவர்களுக்கான நாற்காலியில் உட்கார்கிறபோது, மற்றவர்கள் தங்களது மகிழ்ச்சியை, கைதட்டல் மூலமாக வெளிப்படுத்துவார்கள். அது மகிழ்ச்சியையும், மரியாதையையும் வெளிப்படுத்துகின்ற அடையாளம். அதுதான், அரியணையில் ஏறுகின்ற அரசருக்கும் கொடுக்கப்படுவதாக இருக்கிறது.
அத்தகைய மகிழ்ச்சியை நாமும் நமது வாழ்விலும் இருக்க வேண்டும். நமது வாழ்க்கையில் எப்போதுமே, கடவுளைப் போற்றுவது நமது எண்ணமாக இருக்க வேண்டும். நமது வாழ்வு மூலமாக, நமது வார்த்தை மூலமாக கடவுளை மகிமைப்படுத்துகின்ற வரத்தைக்கேட்டு, இந்த திருப்பாடலை நாம் பாடி மகிழ்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்