ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கத்தை தருபவர் நம் கடவுள். இணைச்சட்டம் 7:9.
கடவுளுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.
இதோ!இந்த நாளிலும் நம்முடைய ஆண்டவராகிய இயேசு காட்டிய பாதையில் நம் வாழ்க்கை பயணம் செல்லுமேயானால்,நம்முடைய வாழ்க்கை மட்டும் அல்லாது நமக்கு பின் வரும் நமது சந்ததியும் ஆசீர்வாதத்தை பெற்று வாழும் என்பதில்சிறிதேனும் சந்தேகம் இல்லை. நம் முன்னோர்களாகிய ஆபிரகாம்,ஈசாக்கு,என்பவர்களுக்கு நம் கடவுள் வாக்குத்தத்தம் செய்தபடியே,அவர்களின் பின்வந்த சந்ததி எத்தனையோ பாவங்களை செய்து ஆண்டவரின் நாமத்தை அலட்சியப்படுத்தினாலும் வாக்கு மாறாத நம் கடவுள் அவர்களுக்கு ஆணையிட்டப்படியே அவர்கள் சந்ததியாரும் ஆசீர்வதிக்கப்பட அவர்கள்மேல் இரக்கம் பாராட்டுவதை திருச்சட்டத்தில் காணலாம்.
ஆகையால் நாம் கடவுளிடம் கேட்கும் காரியத்தை பெற்றுக்கொள்ள அவர் காட்டிய வழியில் நடந்து அவருடைய சினம் நமக்கு எதிராக செயல்பட்டு நம்முடைய ஆசீரை அழிக்காதபடிக்கு காத்துக்கொள்வோம். ஏனெனில் நம்முடைய கடவுளாகிய ஆண்டவரின் தூயமக்கள் நாம். அதுமட்டுமல்லாது இந்த பூமியில் உள்ள மக்களினங்களில் நம்மையே தம் சொந்த மக்களாக தெரிந்துக்கொண்டார். நாம் மிகவும் நல்லவர்கள் என்ற காரணத்தினால் அல்ல. நம்மீது அவர் காட்டிய அளவுக்கதிகமான அன்பினாலும், நம் முன்னோர் களுக்கு இட்ட ஆணையின் நிமித்தமே. இணைச்சட்டம் 7:6-8.
எனவே நம்முடைய கடவுளாகிய ஆண்டவரே கடவுள் எனவும், அவரே உண்மையான இறைவன் எனவும்,நாம் அறிந்து அவர்மீது அன்பு கொண்டு அவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து நமக்கு தரும் ஆயிரம் தலைமுறைக்கான இரக்கத்தை பெற்று மற்றெல்லா மக்களினங்களைவிட நாமே ஆசீர் பெற்றவர்கள் என்பதை உறுதிபடுத்துவோம்.
இந்த தவக்காலத்திலும் நாம் ஒரு உண்மையை புரிந்துக்கொள்வோம். நேபுகத்னேசர் ஒருநாள் ஆண்டவரின் மகிமையை அலட்சியப்படுத்தி தன்னுடைய வலிமையின் ஆற்றலால்தான் அவருக்கு மாளிகையும்,மகுடமும்,கிடைத்தது என்று தன் இருதயத்தில் நினைத்து இது நான் கட்டியெழுப்பிய மகா பாபிலோன் என்று சொன்ன உடனே வானத்தில் இருந்து ஒரு குரல் ஒலி கேட்டது. இந்த அரசு உன்னிடம் இருந்து பறிக்கப்படும் என்றும்,நீ மாட்டைப்போல் புல்மேய்வாய் என்றும், வானத்தின் பனியினால் நனைந்து உன் தவறை உணரும் பட்சத்தில் அவன் பகுத்தறிவு அவனுக்கு திரும்ப வந்தது. அப்பொழுது அவன் கடவுளின் செயல்கள் யாவும் நேரியவை! அவருடைய வழிவகைகள் சீரியவை! ஆணவத்தில் நடப்போரை கடவுள் தாழ்வுறச் செய்வார் என்று அறிந்துக்கொண்டான். தானியேல் 4:33,36,37. அதேசமயத்தில் யோபு புத்தகத்தில் அவர் கடவுளுக்கு மிகவும் பயந்து வாழ்ந்த பொழுதும் கூட சாத்தானால் சோதிக்கப்பட்டு தன் ஆஸ்தி, அந்தஸ்து யாவற்றையும் இழந்து தவிப்பதை பார்க்கிறோம். ஆனாலும் அவர் கைவிடப்படவில்லை. கொஞ்ச காலம் கஷ்டப்பட்டாலும், மறுபடியும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டு எல்லாவற்றிலும் இரண்டு மடங்கு ஆசீரை பெற்றுக்கொண்டதாக காண்கிறோம். நாமும் கடவுளிடம் இருந்து இரக்கத்தைப்பெற அவர் விரும்பும் பாதையில் சென்று இந்த தவக்காலத்தின் ஆசீரை பெற்று வாழ்ந்து பிறரையும்,வாழ வைப்போம்.
ஜெபம்
அன்பான இறைவா,நீர் எங்களுக்கு சொல்லி கொடுத்த வழிகளுக்கு உமக்கு நன்றியை செலுத்துகிறோம்.நீர் எங்களுக்காக வைத்துள்ளஆயிரம் தலைமுறைக்கான இரக்கத்தை பெற்றுக்கொள்ள நீரே ஒவ்வொருநாளும் போதித்து வழிநடத்தும்.எங்கள் அனுதினபாவங்களை எங்களுக்கு மன்னித்து உமது இரக்கத்தில் எங்களை நினைத்து ஆசீர்வதியும்.கடவுளாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் நல்ல ஆண்டவரே! ஆமென்!!அல்லேலூயா!!!