ஆன்மீக உணவு ஆளையே மாற்றும்…
யோவான் 6:51-58
இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 20ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
புனித கிளாரா, இத்தாலியின் அசிசி நகரில் பிரபுக்கள் குடும்பத்தில் 1194 ஜூலை 16ம் தேதி பிறந்தார். இவருக்கு 18 வயது நடந்தபோது, அசிசியின் புனித பிரான்சிஸ் ஆற்றிய தவக்கால மறையுரையால் ஈர்க்கப்பட்டார். தனது இரு தோழிகளுடன் இரகசியமாக வீட்டை விட்டு வெளியேறி, தமியான் ஆலயத்தில் தங்கி இருந்த புனித பிரான்சிசை சந்தித்தார். அங்கு இவர் துறவற வாழ்வுக்கான ஆடைகளைப் பெற்றுக் கொண்டார். அன்றிலிருந்து துறவற வாழ்வை சொந்தமாக்கிக் கொண்டார்.
1244ம் ஆண்டு, அரசன் “இரண்டாம் ஃபிரடெரிக்கின்” இராணுவத்தினர் அசிசியை கொள்ளையிட வந்தனர். அப்போது, அர்ச்சிஷ்ட நற்கருணை ஆண்டவரை கையிலேந்தியபடி கிளாரா வெளியே வந்தார். நற்கருணை நாதரின் வல்லமையாலும், திடீரென நிகழ்ந்த அற்புதத்தாலும், அரச இராணுவத்தினர் எவருக்கும் யாதொரு துன்பமும் ஏற்படுத்தவில்லை. அவர்ளுடைய படையானது குழப்பத்திற்குள்ளானது. ஆகவே சிதறுண்டு ஓடினார்கள்.
கிளாரா நற்கருணை நாதராம் இயேசுவிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இவர் இயேசுவின் வல்லமையையும் அன்பையும் தனது வாழ்வில் எப்போதும் உணர்ந்து வாழ்ந்தார். நற்கருணையின் மதிப்பீடுகளான அன்பு, தியாகம் ஆகியவற்றை தனது வாழ்வில் கடைபிடித்து வாழ்ந்து வந்தார்.
“இறைவா, உம் விருப்பம் போல் என்னை நடத்தும்; என் மனம் என்னுடையதல்ல உமக்குரியது” என்று கிளாரா அடிக்கடி செபித்து வந்தார். தன்னோடு துறவற வாழ்வு மேற்கொண்டிருந்த பெண்கள் இறைவனின் அன்பில் வளர இவர் சிறந்த முன்மாதிரியாக விளங்கினார்; ஏழை, எளியப் பெண்களின் வாழ்க்கை மேன்மை அடைய மிகவும் ஆர்வமாக உழைத்தார்.
அன்புமிக்கவர்களே! தூய அசிசி கிளாரா நற்கருணையின் மீது பக்தி கொண்டார். பக்தியோடு மட்டும் நிறுத்திவிடவில்லை. மாறாக நல்லது செய்யும் நற்கருணையாகவே மாறினார்.
நற்கருணை என்பது “இறைவனின் அனண கடந்த அருள்” என்கிறார் வீரமாமுனிவர். நற்கருணை உணவாக, உயிரோட்டம் தருவதாக, உற்சாகம் கொடுப்பதாக, உயிரளிப்பதாக, உறவை வலுப்படுத்துவதாக என்று பல பரிமாணங்களை உள்ளடக்கியது. நற்கருணை கண்ணுக்கெட்டாத தூரத்தில் உள்ள இறைவனை நம் அருகில் பிரசன்னப்படுத்தி நம் வழியாக இறைசக்தி வெளிப்பட்டு பரவ உதவுகிறது. நற்கருணையில் ஆண்டவரைக் காண்பதும், அவர்முன் அமா்ந்து ஜெபிப்பதும், அவருடன் நடைபயில்வதும் தான் நம் ஆன்மீகம்.
– நற்கருணை இயேசுவின் கல்வாரிப் பலியை நமக்கு நினைவூட்டுகிறது.
– நற்கருணை இயேசு நம்மோடு பிரசன்னமாக இருக்கிறார் என்ற வாக்குறுதியை தருகிறது.
– நற்கருணை நாமும் இதைப்போல வாழ வேண்டும் என்ற அழைப்பை விடுக்கிறது.
பொதுக்காலம் 20ம் ஞாயிறு, நற்கருணையை பயபக்தியோடு வணங்கி ஆராதிக்கவும், அதோடு நற்கருணை இயேசுவாக நாம் மாறவும் அழைப்புக் கொடுக்கிறது. பிறந்த நாம் ஏதும் பயன் இல்லாமல் இந்த உலகை விட்டு பிரிந்து விடக்கூடாது. மாறாக மாற வேண்டும், மடிய வேண்டும், நடமாட வேண்டும், நற்கருணையாக நடமாட வேண்டும் என அழைக்கின்றது. நற்கருணை மூன்று முத்தாய்ப்பான அழைப்புக்களை விடுக்கின்றது.
1. நற்கருணை பசியை போக்க சொல்கிறது
யூகரிஸ்டேய்ன் என்ற கிரேக்க பதத்திலிருந்துதான் யூக்கரிஸ்ட் என்ற ஆங்கில வார்த்தை பிறக்கிறது. ஆனால் யூகரிஸ்டேய்ன் என்ற வார்த்தையின் பொருள் நன்றி சொல்வது. ஆக, நற்கருணை என்றால் அடிப்படையில் நன்றி சொல்வது. எதற்கு நன்றி? கிறிஸ்துவின் கல்வாரி பலிக்கு, அவரின் தியாகத்திற்கு, அவரின் உடனிருப்புக்கு என சொல்லி நன்றியைச் சுருக்கிவிட வேண்டாம்.
நன்றி சொல்வது என்பது நினைவுகூறுதல். அதாவது, நினைவுகூறும் ஒருவர் தான் நன்றி என்றே சொல்ல முடியும். நினைவும், நன்றியும் எப்போதும் இணைந்தே செல்கிறது. ஆகையால்தான் நன்றி இல்லாதவரை நாம் ‘நன்றி மறந்தவர்’ என்று சொல்கிறோம்.
பழைய ஏற்பாட்டில் இச 8:2-3,14-16ல் பார்க்கிறோம், ‘நினைவில் கொள்ளுங்கள்,’ என்று தொடங்கி, ‘மறந்துவிடாதீர்கள்’ என தன் அறிவுரையை நிறைவு செய்கின்றார் மோசே. இஸ்ரயேல் மக்கள் எதை நினைவில் கொள்ள வேண்டுமாம்? அ. ஆண்டவரின் வழிநடத்துதலை ஆ. ஆண்டவர் மன்னா உண்பித்ததை இ. ஆண்டவர் தந்த பாதுகாப்பை. இந்த வாசகத்தில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, ‘உங்களுக்கு பசியை தந்தார்’ என்ற வரிதான். கடவுள் நமக்கு பசியை தரவில்லை என்றால் இன்று நாம் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம்.
‘பசி வந்தா பத்தும் பறந்திடும்’ என்று சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், உண்மை அதுவல்ல. பசியை அனுபவித்த ஒருவர் அனைத்தையும் நினைவில் கொள்வார். உதாரணத்திற்கு, எனக்கு பணத்தேவை என்ற பசி இல்லாவிட்டால், எனக்கு பணம் தந்து உதவியவரை நான் மறந்துவிடுவேன். ஆக, பசி என்பது வெறும் வயிற்றுப்பசி அல்ல. மாறாக, பசி என்றால் ஒரு குறைவு. அதாவது, நிறைவாக இருக்க வேண்டிய வயிறு குறைவாக அல்லது காலியாக இருக்கிறது. அந்த காலியான நிலைதான் பசி. அந்தக் காலியான நிலையை நாம் உணவைக்கொண்டும், தண்ணீரைக் கொண்டும் நிறைத்துவிட்டால் நம் பசி போய்விடுகிறது.
எல்லா உயிர்களுக்கும் பசி இருக்கும். பசி இருக்கும் வரை தான் நமக்கு உயிரும் இருக்கிறது. ஆகையால்தான் பசி எடுக்கவில்லை என்றால் மருத்துவரிடம் ஓடுகிறோம். எனக்கு பசிப்பதே இல்லை! என யாரும் ஓய்ந்துவிடுவதில்லை. ஆக, மனிதரின் மிக சாதாரணமான ஒரு உணர்வை எடுத்து கடவுள் அதை மிக அழகாக கையாளுகின்றார். அந்தப் பசியின் வழியாக அவர்களுக்குத் தன் உடனிருப்பைக் காட்டுகின்றார்.
மன்னா அல்லது காடை இறைச்சி கொடுப்பதற்கு பதிலாக கடவுள் அவர்களுக்கு பசியே எடுக்காமல் செய்திருக்கலாம் அல்லவா? முதலில் பசி என்ற உணர்வைக் கொடுக்கின்றார். பின் அந்தப் பசியை போக்குகின்றார். இந்த நிறைவு என்பது தற்காலிகமானது. உண்ட உணவு செரித்துவிட்டால் நமக்கு மீண்டும் பசி எடுக்கும். ஆக, மீண்டும் அவர் உணவு தருவார்.
இவ்வாறாக, பசி இருக்கும் வரை நமக்கு தேடல் இருக்கும். அந்தத் தேடலின் நிறைவாக இறைவன் இருப்பார். ஆக, நாம் கொண்டாடும் நற்கருணை என்பது நம் பசியின் நிறைவு. ஆனால், அந்த நிறைவு நாம் உண்ணும் அப்பம் அல்லது ரொட்டியில் அல்ல. மாறாக, கடவுளின் வாய்ச்சொல்லில் இருக்கிறது. ஆக, காணக்கூடியதிலிருந்து காண முடியாத ஒரு புரிதலுக்கு அழைக்கிறார் கடவுள். நற்கருணையை நாம் பார்க்கும்போதெல்லாம் நம் குறைவும், பசியும் நினைவுக்கு வருகிறது. அந்தப் பசியை ஆற்றுபவராக நம் முன் வருகிறார் கடவுள்.
இப்படி கடவுள் நம் பசியை ஆற்றுகிறார் என்றால் நாம் ஒருவர் மற்றவரின் பசியை ஆற்ற வேண்டும். உணவுப் பசி, அறிவுப் பசி, பணப் பசி, உறவுப் பசி என நாம் உணரும் குறைகளை போக்குபவர் நம் கடவுள் என்றால், இவற்றை நாம் மற்றவர்களுக்குப் போக்கும் போது நாமும் நற்கருணை ஆகின்றோம்.
2. நற்கருணை இணைப்பை உருவாக்க சொல்கிறது
கொரிந்து நகரத் திருச்சபைக்குள் நிலவிய பிளவுகள் மற்றும் பிரிவினைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றைக் கடிந்து கொண்டு, அவர்களுக்கு அறிவுறுத்தும் பவுலடியார் 1கொரி10:16-17ல், நற்கருணையை ஒன்றிணைப்பின் உருவகமாக கையாளுகின்றார்.
நமக்கும், நம் உறவினர்களுக்கும் இடையே இருக்கும் உறவில் விரிசல் வரும்போது, ‘உனக்கும், எனக்கும் சம்பந்தம் கிடையாது. உன் வீட்டில் நான் கை நனைக்க மாட்டேன்’ என்று விலகிவிடுகிறோம். ‘கை நனைப்பது’ என்பது அடுத்தவரின் பாத்திரத்தில் கையிடுவது. திருமண விருந்தின்பொழுது ஒரே அண்டாவில் சமைத்த உணவை நாம் உண்கிறோம். இருக்கிறவர், இல்லாதவர் எல்லாருக்கும் ஒரே உணவுதான். ஒரே உணவை உண்கின்றோம் என்றால் நாம் சகோதரர், சகோதரிகள் ஆகிவிடுகிறோம்.
இன்று ஆலயத்திற்கு வருகின்ற நம் எல்லாருக்கும் நற்கருணை நற்கருணையாகத்தான் தெரிகிறது. ஒரே கிண்ணத்திலிருந்து அப்பத்தை உண்கிறோம். ஆக, நற்கருணை என்ன சொல்கிறது? இதோ, இந்த ஆலயத்திற்குள் கூடி நிற்கும் நாங்கள் அனைவரும் நிறத்தால், குணத்தால், பணத்தால், மனத்தால், மொழியால், பண்பாட்டால் வேறுபட்டிருந்தாலும் நாங்கள் அனைவரும் ஒன்றே. ஏனெனில் எங்களுக்குள் செல்லும் உணவு ஒன்றே. என் வயிற்றுக்குள் செல்லும் நற்கருணையும், உங்கள் வயிற்றுக்குள் செல்லும் நற்கருணையும் ஒன்றே. அப்படி என்றால் உங்கள் உடலும், என் உடலும் ஒன்றே. பின் ஏன் பிரிவினைகள்?
மேலும், இந்த நற்கருணையில் இயேசுவே இருப்பதால் நாம் கடவுளோடு முதலில் இணைகிறோம். இந்த இணைந்திருத்தலைத்தான், ‘எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர்’ என்கிறார் இயேசு (யோவா 6:51-58)
3. நற்கருணை கொடுக்க சொல்கிறது
‘நாம் உண்பதற்கு இவர் எப்படி தமது சதையைக் கொடுக்க முடியும்?’ – இந்தக் கேள்விதான் இன்றைய நற்செய்தி வாசகத்தின் (யோவா 6:51-58) மையமாக இருக்கிறது. இவர் எப்படி கொடுக்க முடியும்? இந்தக் கேள்வி இன்று நம்முள்ளும் எழுகிறது. எப்போது?
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அல்லது ஐஏஸ் என்னும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெல்பவர்களை நாம் முதல் இடம் எடுத்தவர்கள் அல்லது முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் என சொல்கிறோம். ஆனால், இவர்கள் ‘எடுப்பதற்கு’ காரணம் இவர்கள் ‘கொடுத்ததுதான்’. அதாவது, தங்கள் நேரத்தைக் கொடுத்தார்கள். ஆற்றலைக் கொடுத்தார்கள். சின்ன சின்ன சந்தோஷங்களை விட்டுக்கொடுத்தார்கள். ஆக, எடுத்தல் வேண்டுமென்றால் கொடுத்தல் அவசியம்.
ஆனால், இன்றைய நம் உலகம் கொடுப்பவர்களை விட எடுப்பவர்களையே முதன்மைப்படுத்துகிறது. மக்களிடமிருந்து பணத்தை எடுக்கும் அரசியல்வாதிகளும், வலுவற்றவர்களிடமிருந்து உயிரை எடுக்கும் பயங்கரவாதிகளும்தான் செய்தித்தாள்களின், மாத இதழ்களின் முகப்பில் மின்னுகிறார்கள். தங்கள் உயிரை, ஆற்றலை மற்றவர்களுக்காக கொடுத்தவர்கள் எல்லாம் வெறும் உள்பக்க பெட்டிச் செய்திகளாகவே நின்றுவிடுகிறார்கள். எடுப்பவர் நன்றாக இருப்பதால், கொடுப்பவரும் காலப்போக்கில் எடுக்கத் தொடங்குகின்றார்.
நம் உறவுகளில் கூட நாம் நம் நேரத்தை, ஆற்றலை, உணர்வுகளை மற்றவருக்குக் கொடுக்காமல், எடுக்க மட்டுமே நினைக்கும்போது நாம் அத்துமீறல் செய்கின்றோம். உறவைச் சீர்குலைத்துவிடுகின்றோம். முன்னோர் உண்ட உணவு மன்னா. அதை அவர்கள் தாங்களாக உண்டனர். இறந்தனர்.
ஆனால், நற்கருணையில் வாழ்வு தொடர்கிறது. எப்படி? என்னிடம் 1000 ரூபாய் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதை நான் ‘எடுத்து’ திரைப்படம் அல்லது உணவகம் அல்லது பொழுதுபோக்கு என செலவழித்தால், அந்த 1000 ரூபாய் என்னோடு முடிந்துவிடுகிறது. அது எனக்குள் இறந்துவிடுகிறது. அந்தப் பொழுதோடு சேர்த்து நானும் இறந்துவிடுகின்றேன்.
ஆனால், அதே 1000 ரூபாயை எடுத்து நான் ஒரு மாணவரின் படிப்புச் செலவுக்காக அல்லது முதியவர் ஒருவரின் மருத்துவ செலவுக்காக ‘கொடுத்தால்,’ அது அந்த மாணவரிலும், முதியவரிலும் தொடர்ந்து வாழ்கிறது. அந்தப் பணம் அழிவதில்லை. நானும் அழிவதில்லை. இதுதான் இயேசு சொல்லும், ‘என்றும் வாழ்வர்’ என்பதன் அர்த்தம்.
இதையே தூய பவுலடியாரும், ‘வாழ்வோர் இனி தங்களுக்கென்று வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழ வேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்’ (2 கொரி 5:15) என எழுதுகின்றார். கிறிஸ்து எனக்காக இறந்தார் என்றால் நான் மற்றவருக்காக இறக்க வேண்டும். கோதுமை மணி இறப்பதால் அப்பம் உருவாகிறது. அப்படியே நான் மற்றவர்களுக்காக இறக்கும்போது நானும் மாற்றம் அடைகிறேன்.
நற்கருணையில் அப்பம் என்ற இயல்பு மாறி, கிறிஸ்துவின் உடல் உருவாகிறது என்றால், அதை உண்ணும் என்னிலும் அதே மாற்றம் இருக்க வேண்டும். நம்மில் பசி எடுக்கும் ஒவ்வொரு பொழுதும், நாம் இணைப்புக்காக ஏங்கும் ஒவ்வொரு பொழுதும், நாம் மற்றவருக்குக் கொடுக்க கைகளை நீட்டும் ஒவ்வொரு பொழுதும், நாமும் நற்கருணை ஆகின்றோம்.
‘இது என் உடல், இது என் இரத்தம். ஆனால் இது உனக்காக’ என அன்று அவர் பசி போக்கினார். இணைத்தார். கொடுத்தார். ஒவ்வொரு பொழுதும் நற்கருணையை உற்று நோக்கும்போதும், கைகளில் ஏந்தும்போதும், நாம் பசியை போக்கவும், இணைத்தலை உருவாக்கவும், கொடுத்தலை பெருக்கவும் நினைத்தால், நாமும் நற்கருணையாக மாற முடியும்.
மனதில் கேட்க…
• நற்கருணையை பக்தியோடு வணங்குகிறேனா? தகுந்த மரியாதை செலுத்துகிறேனா?
• நற்கருணை சுட்டிக்காட்டும் பாடங்களை கடைப்பிடித்து எனக்குள் இயேசுவை கொண்டு வரலாமே?
மனதில் பதிக்க…
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் (யோவா 6:51)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா