ஆன்மீகம் நிறைந்த குடும்பங்கள் !
இன்று திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு குடும்பமும் ஆண்டவர் இயேசுவின் ஆசிபெற்ற குடும்பமாக விளங்க இன்று சிறப்பாக மன்றாடுவோம். குடும்பங்கள் பலவிதமான சிக்கல்களைச் சந்திப்பதை இன்று பார்க்கிறோம். மண முறிவுகள், பிளவுகள், ஊடகங்களின் தாக்கத்தால் அறநெறிச் சிக்கல்கள் போன்றவை குடும்பத்தின் ஆணி வேரையே அசைத்துப் பார்க்கின்றன. திருமணம் செய்யாமல், குடும்ப வாழ்வுக்குள் நுழையாமல் விருப்பம்போல் வாழலாம் என்னும் மனநிலை மெல்ல, மெல்ல பரவி வருகிறது. எனவே, குடும்பங்களை உறுதிப்படுத்தும் பணியை நாம் அக்கறையுடன் ஆற்றவேண்டும்.
குடும்பங்கள் ஆன்மீகம் நிறைந்தவையாகத் திகழ்ந்தால்தான், இன்றைய சவால்களைச் சந்திக்க முடியும். இந்த குடும்பங்களின் ஆன்மீகம் இறைநம்பிக்கை, நற்பணி, நல்லுறவு, நற்செய்தி அறிவி;ப்பு என்னும் நான்கு தளங்களில் கட்டப்பட வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் நாள்தோறும் செபித்து, இறைவார்த்தையின்படி, அருள்சாதனங்களில் பங்கேற்று வாழ்வதே இறைநம்பிக்கையின் வெளி;ப்பாடு. தங்கள் கடமைகளை நேர்மையுடனும், கடமையுணர்வுடனும் நேர்த்தியாக ஆற்றுவது நற்பணியின் வெளிப்பாடு. பல்வேறு விதமான உறவுகளில் பாராட்டு, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், இழத்தல் போன்ற பண்புகளில் வளர்வது உறவின் வெளிப்பாடு. இறுதியாக, திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் நற்செய்தி அறிவிக்கும் கடமையுடையவர்கள் என்னும் நிலையில், தங்களால் இயன்ற விதத்தில் நற்செய்திக்கு சான்று பகர்ந்து வாழ்வது நற்செய்தி அறிவிப்புப் பணியின் வெளிப்பாடு. இந்த நான்கு தளங்களிலும் நிறைவு பெறும் குடும்பங்களே ஆன்மீகம் நிறைந்த குடும்பங்களாக விளங்க முடியும். இந்த நாளில் நமது குடும்பங்கள் அனைத்தும் இத்தகைய ஆன்மீக குடும்பங்களாகத் திகழ இறைவனை வேண்டுவோம்.
மன்றாடுவோம்: அனைத்துக் குடும்பங்களின் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் குடும்பங்களை ஆசிர்வதியும். எல்லாக் குடும்பங்களும் இயேசு, சூசை, மரியா போன்ற திருக்குடும்பங்களாக வாழ அருள்தாரும். எங்கள் குடும்பங்களில் நாங்கள் இறைநம்பிக்கை, நற்பணி, நல்லுறவு, நற்செய்தி அறிவிப்பு என்னும் நான்கு தளங்களிலும் நிறைவாக வாழ்வோமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
— அருள்தந்தை குமார்ராஜா