ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றோர்
கடவுள் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். ”ஆற்றலாலும் அல்ல, சக்தியாலும் அல்ல, ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே” என்கிற இறைவார்த்தையின் பொருள் இங்கே வெளிப்படுகிறது. இந்த உலகத்தில் வாழும் எல்லாருமே தொடக்கத்தில் கடவுளைப் பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில், அவர்கள் அடையாளம் பெற்ற பிறகு, அந்த அடையாளத்தைக் கொடுத்தவரை மறந்துவிடுகிறார்கள். தங்களது சக்தியினால் தான் எல்லாம் முடிந்தது, என்று கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கையை தங்களின் ஆற்றலின் மீது வைத்துவிடுகிறார். அது தான் அழிவிற்கான ஆரம்பம் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
இந்த திருப்பாடலைப் (திருப்பாடல் 1: 1 – 2, 3, 4 & 6) பொறுத்தவரையில் தன்னுடைய தனிப்பட்ட அனுபவத்தையும், இஸ்ரயேல் மக்களின் அனுபவத்தையும் ஒன்றிணைத்து ஆசிரியர் இதனை எழுதுகிறார். தாவீது அரசருக்கு அடையாளம் கொடுத்தவர் கடவுள். சாதாரண ஆடு மேய்க்கக்கூடிய சிறுவனாக இருந்த தாவீது, இஸ்ரயேல் மக்கள் போற்றக்கூடிய அரசராக மாற முடிந்தது என்றால், அது அவனது வலிமையினால் அல்ல, மாறாக, கடவுளின் வல்லமையினால். அதேபோல அடிமைத்தளையில் கட்டுண்டு கிடந்த இஸ்ரயேல் மக்களை, அடிமைத்தளையை அறுத்தெறிந்து, அவர்களுக்கு வாழ்வு கொடுத்து, அடையாளத்தைக் கொடுத்தவர் ஆண்டவராகிய கடவுள். அவர்களது வல்லமையினால் நிச்சயமாக அல்ல. இரண்டு பேருமே, இந்த இறைநம்பிக்கையிலிருந்து விலகிச் செல்கிறபோது, அதற்கான அழிவைச் சந்தித்துக்கொண்டார்கள். எனவே, எப்போதும் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களாக வாழ ஆசிரியர் அழைக்கிறார்.
நமது வாழ்க்கையிலும் வெற்றி என்பது நம்மை கடவுளிடமிருந்து பிரிக்கக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. கடவுள் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை எதுவும் பிரிக்காத வண்ணம், நமது நம்பிக்கை உறுதியுள்ளதாக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை மிகுதியாக்க கடவுளின் அருள் வேண்டுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்