ஆண்டவர் பெயர் வாழ்த்துக்குரியது
தானியேல் 1: 29, 30 – 31, 32 – 33
சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ என்கிற மூன்று இளைஞர்கள் ஆண்டவர்க்கு அஞ்சி வாழ்ந்தவர்கள். அதனால், அவர்கள் தண்டிக்கப்பட இருந்தார்கள். ஒன்று கடவுளை மறுதலிப்பது அல்லது மடிவது. இதுதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சோதனை. அவர்கள் மடிவதை தேர்ந்தெடுத்தார்கள். எனவே அவர்கள் தீச்சூளையில் தூக்கி எறியப்பட்டனர். சூளையின் தீ எந்தளவுக்கு அதிகமாக இருந்தது என்றால், அவர்களைத் தூக்கி எறியச் சென்ற காவலர்கள், தீயின் தாக்கம் தாங்காமல் எறிந்து போயினர். ஆனால், இவர்கள் எரியாமல், தீச்சூளையினுள் நடமாடிக்கொண்டிருந்தார்கள். இறைவன் அவர்களுக்குச் செய்த ஆச்சரியத்தில், அவர்கள் கடவுளைப் புகழ்ந்து பாடுவதுதான் இன்றைய பாடல்.
கடவுளை மூதாதையரின் கடவுளாக அவர்கள் பாடுகிறார்கள். அவர்களது முன்னோர்களாக இருந்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் கடவுள் மாட்சியும், தூய்மையும் நிறைந்தவர் என்று பாடுகிறார்கள். கடவுள் வாக்குறுதி மாறாதவராக இங்கே சித்தரிக்கப்படுகிறார். கடவுளின் வாக்குறுதி ஏதோ ஒரு தலைமுறையோடு நின்றுவிடவில்லை. வழிவழியாக கடவுளின் வாக்குறுதி நிறைவேற்றுதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடவுள் தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கு எப்போதுமே பிரமாணிக்கமாகவே இருந்து கொண்டிருக்கிறார். எனவே தான், அவர் மாட்சிமைக்கு உரியவராகவும், போற்றுதற்கு உரியவராகவும் இருக்கிறார். இவ்வளவு நாட்கள் முன்னோர்களின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டதை, இப்போது அவர்களே நேரடியாக அனுபவிக்கிற உணர்வு, அந்த மூன்று இளைஞர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
கடவுள் என்றும் வாக்குறுதி மாறாதவராக இருக்கிறார். அவர் நம் அனைவருக்கும் தந்தையாக இருக்கிறார். நம்மை வழிநடத்தக்கூடியவராக இருக்கிறார். நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை விரும்பக்கூடியவராகவும் இருக்கிறார். அந்த கடவுளிடத்தில் நம்மையே முழுமையாக ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்