ஆண்டவர் நம்மை என்றென்றைக்கும் கைவிடவே மாட்டார்.
கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
இந்த நாளிலும் நம்மை ஆண்டவர் நமது எல்லாத்தேவைகளையும் சந்தித்து நம்மை அவருடைய இறக்கைகளின் மறைவில் மறைத்து காத்து, நாம் போகையிலும், வருகையிலும் நம்மோடு கூடவே இருந்து நம்மை என்றென்றைக்கும் கைவிடாமல் காப்பார். அதற்கு நாம் நமக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராய் நம்முடைய கண்களை ஏறெடுப்போம். அப்பொழுது விண்ணையும், மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்து நமக்கு உதவி வரும். நம்முடைய கால் இடறாத படிக்கு பார்த்துக்கொள்வார்.
நம்மை காக்கும் தேவன் கண்ணயர்வதுமில்லை: உறங்குவதுமில்லை, ஆண்டவரே நம்மை காக்கின்றார். நம் வலப்பக்கத்தில் உள்ளார். அவரே நமக்கு நிழலாய் இருக்கிறார். பகலில் கதிரவனும், இரவில் நிலாவும், நம்மை தீண்டாது. ஆண்டவர் நம்மை எல்லாத் தீமையிலிருந்தும் பாதுக்காப்பார். அவரே நம் உயிரையும் காத்திடுவார். பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கி யிருப்பதுபோல நாமும் ஆண்டவர் நமக்கும் இரங்கும் வரை அவரையே நோக்கியிருப்போம். அப்பொழுது ஆண்டவர் நம்மேல் மனதுருகி நம் வேண்டுதலை கேட்டு நமக்கு யாவற்றையும் தந்தருளுவார்.
ஆண்டவர் நம்முடைய சார்பாக இருந்து நமக்கு யாரும் எந்த தீங்கையும் செய்யாதபடிக்கும், மற்றவர்கள் சினம் நம்மேல் மூலாதபடிக்கும், வேடர் கண்ணியின்று தப்பி பிழைத்த புறாவைப்போல் நாமும் தப்பி பிழைக்கும்படி நமக்கு மனமிரங்குவார். நாமும் அவரையே நம்பி, அவரையே எல்லாக்காரியத்திலும் விசுவாசித்து அவரையே துணையாக கொண்டு வாழ்வோம். ஏனெனில் அவர்மேல் தமது முழு நம்பிக்கை வைத்த ஒருவராவது கெட்டுப்போனதில்லை. நல்லவர்களுக்கும், நேரிய இதயமுள்ளவர்களுக்கும், அவர் நன்மையே செய்தருள்வார். நாமும் நம்முடைய கஷ்டங்களின் மத்தியிலும், துன்பங்களின் மத்தியிலும் அவரயே போற்றி துதிப்போம். நம் துதிகளை கேட்டு அவர் நமக்கு உதவி செய்வார்.
நம்முடைய எல்லா துன்பங்களின் மத்தியிலும் நாம் சோர்ந்து போகாமல் அவரை உற்று நோக்கி துதிப்போமானால் ஆண்டவர் சீயோனிலிருந்து நமக்கு ஆசி வழங்குவார். நாம் நமது பிள்ளைகளின்
சுகவாழ்வையும் காணும்படி கிருபை அளித்திடுவார். நம் வாழ்நாள் எல்லாம் நல்வாழ்வை காணும்படி செய்வார். நாமும் தாய்மடியில் தவழும் குழந்தையைப்போல் ஆண்டவரின் மடியில் தவழலாம். நம்முடைய இருதயம் ஒரு குழந்தையின் இருதயம்போல் செருக்கு, இறுமாப்பு, பழிவாங்குதல், கோபம், வஞ்சனை ஆகிய தீய குணங்களை எல்லாம் விட்டு விடுவோம். தியாகத்தோடு கூடிய அன்போடு ஒருவரை தாங்கி, ஒருவரை ஒருவர் அன்பு செய்து ஆண்டவரைப்
போல் செயல்பட்டு நம்முடைய எல்லா ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்வோம்.
ஜெபம்
அன்பின் தெய்வமே! எங்களை கைவிடாமல் காப்பவரே உமக்கு நன்றி இயேசப்பா. நீர் சொல்ல அப்படியே ஆகும். நீர் கட்டளையிட அப்படியே நடக்கும். நீர் சொல்லாமல் கட்டளையிடாமல் எந்தக் காரியமும் எங்கள் வாழ்க்கையில் நடைபெறாது என்று நம்புகிறோம். ஆகையால் துன்பம் வரும் வேளையில் சோர்ந்து போகாமல் உமது முகத்தை உற்று நோக்கி உம்மை எங்கள் முழு உள்ளத்தோடு துதித்து ஆராதிக்க உதவியருளும். உம்மேல் உள்ள அன்பினாலும், நம்பிக்கையினாலும், எங்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருந்து உமக்கு மகிமை செலுத்த கிருபை அளித்தருளும். நீர் என்றென்றைக்கும் கைவிடாத தேவன் என்பதை நாங்கள் ஒருபோதும் மறந்து விடாதபடிக்கு எங்கள் இதயத்தை காத்துக்கொள்ளும். துதி, கனம், மகிமை உமக்கே உண்டாகட்டும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் ஜீவனுள்ள பிதாவே!ஆமென்!!அல்லேலூயா!!!