ஆண்டவர் தோற்றுவித்த நாள் இதுவே
திருப்பாடல் 118: 2 – 4, 22 – 24, 25 – 27a, (1)
”கடவுள் தோற்றுவித்த நாள்“ என்கிற இந்த வரிகள் பல நேரத்தில் தவறாக விளக்கம் கொடுக்கப்படுகிறது. இது புதிய நாளை குறிக்கக்கூடிய அர்த்தத்தில் பார்க்கப்படுகிறது. ஆனால், அது தவறு. இது கடவுள் பிற்காலத்தில் அனுப்ப இருக்கிற மீட்பரின் நாளை குறிக்கக்கூடியதாக இருக்கிறது. அதாவது, இயேசுவைக் குறிக்கும் வார்த்தையாக இது இருக்கிறது. இயேசுவில் மீட்பிற்கான அடித்தளக்கல்லை கடவுள் நட்ட இருக்கிறார் என்பதை, இந்த வரிகள் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
பழங்காலத்தில், மிகப்பெரிய அரசுகள், வெகு எளிதாக தங்களது அதிகாரத்தை சாதாரண நாடுகள் மீது நிலைநாட்டின. இஸ்ரயேலை அவர்கள் ஒரு பொருட்டாக மதித்ததே இல்லை. ஆனால், கடவுள் அவர்கள் வழியாகத்தான் இந்த உலகத்தை மீட்டார். பாபிலோனிலிருந்து நாடுகடத்தப்பட்ட யூதர்கள், தங்களது நாட்டிற்கு வந்து, மீண்டும் கோவிலைப் புதுப்பிக்கத் தொடங்கிய நாட்களில், இந்த திருப்பாடல் எழுதப்பட்டிருக்கலாம். எனவே தான், கட்டிடத்தின் தொடர்பான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கு, இஸ்ரயேலின் அரசர்களை ”கற்களுக்கு” ஒப்பிட்டுச் சொல்லியிருக்கலாம். ஏனென்றால், இஸ்ரயேலின் அரசர்கள், இஸ்ரயேல் நாட்டை பிரதிபலித்தனர். கடவுளின் நாள் நிச்சயம் வரும். அந்த கடவுளின் நாளில், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். அந்த மகிழ்ச்சியை கடவுள் அனைவருக்கும் தருவார் என்கிற ஆழமான செய்தியை இது தருவதாக இருக்கிறது.
கடவுள் எப்போதும் நமது மகிழ்ச்சியை விரும்புகிறவராக இருக்கிறார். நாம் எவ்வளவு தான் பிரச்சனைகளுக்கு மத்தியில் வேதனைப்பட்டாலும், அதிலிருந்து நம்மை முழுமையாக விடுவிப்பதற்கு, அவர் எல்லாவித வழிகளிலும் முயற்சி எடுக்கிறார். அந்த கடவுளிடம் முழுமையான அன்பு கொண்டு, அவரது நாள் வர வேண்டுமென்று நாம் மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்