ஆண்டவர் தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்
திருப்பாடல் 96: 1 – 2a, 2b – 3, 10
இறைவன் இஸ்ரயேல் மக்களை அற்புதமாக வழிநடத்தியிருக்கிறார். இறைவனின் வழிகாட்டுதலை, அற்புதமான முறையில், அதிசயமான முறையில் அவர்களை வழிநடத்தியதை, இஸ்ரயேல் மக்கள் மட்டும் தான் அறிவார்கள். இன்றைய திருப்பாடல், இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு செய்திருக்கிற சிறப்பான செயலை அறிவிப்பதாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்களுக்கு பலவிதமான செயல்களைச் செய்திருந்தாலும், இந்த திருப்பாடல் குறிப்பிட்ட நிகழ்ச்சியை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடலாக விளங்குகிறது.
1குறிப்பேடு புத்தகத்தில்ன 13 வது அதிகாரத்திலிருந்து நாம் வாசிக்கிறபோது, இத்தியரான ஓபேது, ஏதோம் இல்லத்தில் கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்ததை நாம் வாசிக்கலாம். அந்த பேழை அங்கே இருந்தவரை, கடவுள் அவரது குடும்பத்தை அற்புதமாக ஆசீர்வதித்தார் என்று விவிலியம் சொல்கிறது. அந்த பேழையை மீண்டுமாக கடவுளின் இல்லத்திற்கு கொண்டு வருகிறபோது, இந்த பாடல் பாடப்பட்டதாக நாம் சொல்லலாம். இதில் தான், கடவுள் எப்படியெல்லாம், படைபலம் பொருந்திய பெலிஸ்தியர்களையும், மற்ற நாட்டினரையும் தாவீதின் வழியாக கடவுள் தோற்கடித்தார் என்பது நமக்குச் சொல்லப்பட்டுள்ளது. கடவுள் செய்த இந்த வல்ல செயல்கள் தான், இந்த திருப்பாடல் நமக்குச் சொல்லக்கூடிய செய்தியாக இருக்கிறது.
நம்முடைய் வாழ்வில் நாம் எப்போதும், கடவுள் நமக்குச் செய்திருக்கிற வல்ல செயல்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படி நினைத்துப்பார்ப்பது, அவர் எந்த அளவுக்கு நம்மை அன்பு செய்கிறார் என்பதை நமக்கு உணர்த்துவதாகவும், இன்னும் வல்லமையோடு மகிழ்ச்சியோடு வாழ்வதற்கும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.