ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்
திருப்பாடல் 98: 2 – 3, 3 – 4, 5 – 6
மெசியாவின் வருகையை எடுத்துரைக்கக்கூடிய இறைவாக்குப் பாடல். மெசியா வருகையின் போது, எப்படி இந்த உலக மக்கள் அனைவரும் கடவுளின் விருந்தில் பங்குகொள்வார்கள் என அனைத்து மக்களையும் உள்ளடக்குகிற பரந்துபட்ட பாடல். கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வாக்களித்திருந்தார். அவர்களை மீட்பதாக உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியையும், உறுதிமொழியையும் எப்படி அவர் நிறைவேற்றப்போகிறார் என்பது இங்கு பாடலாக முன்னறிவிக்கப்படுகிறது.
இந்த திருப்பாடலின் முக்கியமான செய்தி, அனைவருக்குமான மீட்பின் செய்தி. மீட்பு என்பது இஸ்ரயேல் மக்களுக்கானது மட்டுமல்ல. இந்த உலகத்திற்கானது. உலகம் முழுமைக்குமானது. இஸ்ரயேல் மீட்பைக் கொண்டு வருவதற்கான கருவி. அவ்வளவுதான். இஸ்ரயேல் மக்கள் மட்டுமல்ல,உலகத்தின் அனைத்து மக்களும் கடவுளின் பிள்ளைகள் என்பதை உரக்கச் சொல்லும் பாடலாக இது அமைவது தனிச்சிறப்பு. இந்த சிறப்பான செய்தியை கடவுள் மகிழ்ந்து கொண்டாடுவதற்கும் இந்த பாடல் அழைப்புவிடுக்கிறது. ஆக, இதனை மகிழ்ச்சியின் பாடலாகவும் பார்க்கலாம்.
கடவுளின் பார்வையில் நாம் அனைவருமே விலையேறப்பெற்றவர்கள். கடவுள் நம் அனைவரையும் அன்பு செய்கிறார். கடவுள் நம் அனைவருக்கும் மீட்பைத் தருகிறார். அவர் நம் அனைவரின் தந்தை. இந்த சிந்தனையோடு கடவுளை நாம் அணுகுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்