ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்
திருப்பாடல் 94: 12 – 13அ, 14 – 15, 17 – 18
இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் எல்லோரையும் போல ஏற்ற, இறக்கங்கள் நிறைந்திருந்தது. அவர்கள் வளமையிலும் வாழ்ந்தார்கள். அதேபோல துன்பங்களும் அவர்களுடைய வாழ்வை நிறைத்திருந்தது. இந்த துன்பமான நேரத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு எழுந்த மிக்ப்பெரிய கவலை, கடவுள் நம்மோடு இருக்கிறாரா? என்பது. கடவுள் நம்மைக் கைவிட்டு விட்டாரோ? கடவுள் நம்மை விட்டுவிட்டு சென்று விட்டாரோ? என்கிற கவலை அவர்களுடைய உள்ளத்தில் நிறைந்திருந்தது. இப்படிப்பட்ட கேள்விகளுக்கான விடை தான், இன்றைய திருப்பாடல்.
திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார்: கடவுள் ஒருபோதும் தன்னுடைய மக்களை தள்ளிவிட மாட்டார். அதற்கு இரண்டு காரங்களை அவர் தெரிவிக்கிறார். முதல் காரணம், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரால் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள். அவர்கள் வழியாக இந்த உலகத்தை மீட்பதற்கும் ஆசீர்வதிப்பதற்கும் பணி இருக்கிறது. எனவே, கடவுள் அவர்களை ஒருபோதும் தள்ளிவிட மாட்டார். இரண்டாவது, இஸ்ரயேல் மக்கள் கடவுளின் அன்பை உதறித்தள்ளிவிட்டு, மிக மோசமாக நடந்த காலத்தில் எல்லாம் கூட, கடவுள் அவர்களை ஒன்றிணைப்பதில் தான் ஆர்வம் கொண்டிருந்தார். அவர்களை பழிவாங்க வேண்டும் என்று ஒருபோதும் விரும்பியதில்லை. எனவே, கடவுள் கண்டிப்பாக அவர்களை தள்ளிவிட மாட்டார் என்பது திருப்பாடல் ஆசிரியரின் வாதம்.
கடவுள் நம்மை தண்டிக்க வேண்டும் என்றோ, நாம் துன்பப்பட வேண்டும் என்றோ விரும்புகிறவர் கிடையாது. எப்படி இருந்தாலும், நம்மை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார். எனவே, கடவுளின் இந்த உண்மையான அன்பை திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து நாமும் சுவைப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்