ஆண்டவர் தமக்குரியோர்மேல் இறுதிவரை அன்பு செலுத்தினார்.
கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
இதோ, நமக்காக நம்மை நேசிக்க நம்மேல் அன்புக்காட்ட, நம்மை மீட்டிட அதுமட்டும் அல்லாது தமது உயிரையே கொடுக்க விண்ணிலிருந்து மண்ணுலகம் வந்து தமது உயிரைக் கொடுத்து தமக்குரியோர்மேல் இறுதிவரை அன்பு செலுத்திய அவரின் அன்பின் மகத்துவம் எத்துனை இன்பமானது என்று ஒவ்வொருவரும் அறிந்து ருசித்து பார்க்க வேண்டுமாய் விரும்புகிறேன்.
இந்த நாளிலும் நம்மோடு அன்புக்காட்ட யாரும் இல்லையே என்று மனம் சோர்ந்துபோய் உள்ளீர்களா? கவலைப்படாதிருங்கள். நமக்காக ஏங்கி நாம் நன்றாக இருக்கும்படி தமது கண்ணை நம்மேல் வைத்து நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கும் ஒருவர் உண்டு என்பதை மறக்கவேண்டாம். ஏனெனில் மனிதர்கள் நம்மேல் அன்பு காட்டுவார்கள்.திடீரென்று என்ன காரணம் என்றே தெரியாமல் வெறுப்பார்கள். மனிதர்களின் அன்பு அடிக்கடி மாறிவிடும். நிலையற்ற மனிதர்மேல் நம்பிக்கை வைக்காதீர்கள்: அவர்களின் உயிர் நிலையற்றது. ஒரு பொருட்டாக கருதப்படுவதற்கு அவர்களின் தகுதி என்ன? ஏசாயா 2:22.
என் வாழ்நாளை சில விரற்கடை அளவாக்கினீர் என் ஆயுட்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை. உண்மையில் மானிடர் அனைவரும் தம் உச்ச நிலையிலும் நீர்க்குமிழி போன்றவரே! உண்மையில் மானிடர் அனைவரும் நீர்க்குமிழி போன்றவரே! என்று திருப்பாடல்கள்
39:5 மற்றும் 11ம் வசனங்களில் வாசிக்கிறோம். மனிதர்களை நம்புவதைவிட கடவுள் பெயரில் பற்றுக்கொண்டு வாழ்ந்தோமானால் நிறைய பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கப்படுவோம். அன்பு என்பது அறிவுப்பூர்வமானது இல்லை அது உணர்வுப்பூர்வமானது. நாம் சில வேளைகளில் அன்பு செலுத்திவிட்டு அவர்களிடம் இருந்து பதிலுக்கு அன்பு கிடைக்கவில்லை என்றால் நமது உள்ளம் ஏங்கித் தவிக்கும். ஏனெனில் அன்பு சாவைப்போல் வலிமை மிக்கது. அன்பு வெறி பாதாளம்போல் பொறாதது: அதன்பொறி எரிக்கும் நெருப்புப் பொறி:அதன் கொழுந்து பொசுக்கும் தீக்கொழுந்து. பெருங்கடலும் அன்பை அணைக்க முடியாது. வெள்ளப்பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது. அன்புக்காக ஒருவன் தன்வீட்டுச் செல்வங்களை எல்லாம் வாரியிறைக்கலாம்: ஆயினும் அவர்கள் ஏளனம் செய்யப்படுவது உறுதி என்று இனிமைமிகு பாடல் 8:6,7 ல் வாசிக்கிறோம்.
உண்மையிலேயே நாம் ஒருவர்மேல் அன்புக்கொண்டால் அவர்களுக்காக எதையும் இழக்க தயாராக இருப்போம். அதைத்தான் நமது ஆண்டவரும் செய்தார். நாம் பாவிகளாய் இருக்கும்பொழுதும் நம்மை நேசித்து நம்மேல் அன்புக்கொண்டு சாவைப்போல் வலிமை மிக்கது என்று நமக்கு உணர்த்தியுள்ளார். அவர் எப்படி தாம் நேசித்தவர்களுக்காக இறுதி வரை உறுதியோடு இருந்து தமக்குரியோர்மேல் அன்பு செய்து தமது உயிரைக் கொடுத்தாரோ நாமும் அவர் சாயலாய் உருவாக்கப்பட்டவர்கள் என்பதால் அவரின் மாதிரியை பின்பற்றி ஒருவர்மேல் ஒருவர் இறுதிவரை அன்பு வைத்து பாசத்துடனும், நேசத்துடனும்,வாழ்ந்து அவருக்கே மகிமையை உண்டு பண்ணுவோம்.
ஜெபம்
எங்களை நேசித்து எங்கள் மேல் இறுதிவரை அன்புக்காட்டிய ஆண்டவரே! உம்மை போற்றுகிறோம், துதிக்கிறோம். நீர் எப்படி எங்களுக்காக உமது உயிரைக் கொடுத்தீரோ அதுபோல் நாங்களும் ஒருவர்மேல் ஒருவர் உண்மை அன்போடு நடந்துக்கொள்ள உதவி செய்யும். ஏனெனில் உண்மையான அன்பானது தனது உயிரையும் கொடுக்கக் கூடியது என்று எங்களுக்கு உமது முன்மாதிரியை விளங்க வைத்திருக்கிறீர். அதையே நாங்களும் பின்பற்றி வாழ்ந்து உமது நீதியையும்,அன்பையும் நிலை நாட்ட உதவிச் செய்யும். அன்பு திரளான பாவங்களை மூடும் என்று வாசிப்பதுபோல் எங்கள் அன்பினால் ஒருவர் குற்றங்களையும் பாராமல் யாரையும் ரகசியமாகவும் குற்றம் சாற்றாமலும் எல்லாவற்றிலும் உம்மைப்போல் வாழ எங்களுக்கு போதித்து வழிநடத்தும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் ஜீவனுள்ள பரம தந்தையே!ஆமென்!!அல்லேலூயா!!!.