ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூறுங்கள்
இந்த உலகத்தில் நடக்கும் அனைத்துமே கடவுளின் திட்டத்தின்படி தான் நடக்கிறது என்பதை, இந்த திருப்பாடல் (திருப்பாடல் 105: 16 – 17, 18 – 19, 20 – 21) வலியுறுத்திக் கூறுகிறது. கடவுள் மனிதர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே வேளையில், அவர் மனிதர்களுக்கென்று திட்டங்களையும் வகுக்கிறார். இஸ்ரயேல் நாட்டில் பஞ்சம் நிலவியது. இந்த உலகமே பஞ்சத்தால் பரிதவிக்கத் தொடங்கியது. அந்த பஞ்சத்திலிருந்து தன்னுடைய மக்களைக் காப்பாற்ற, அதற்கு முன்னரே யோசேப்பை அற்புதமாக எகிப்தில் ஆண்டவர் உயர்த்தியிருந்தார்.
யோசேப்பின் சகோதரர்கள் அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு தான், அவரை விற்றார்கள். ஆனால், விற்கப்பட்ட சகோதரனிடத்தில் நாம் மண்டியிட வேண்டியிருக்கும் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். அதுதான் இறைவனின் திட்டம். மனிதர்கள் செய்யும் தீமையையும் கடவுள் நன்மையாக மாற்ற வல்லவர். அதிலிருந்து மிகப்பெரிய ஆசீர்வாதத்தைப் பொழியச் செய்கிறவர். ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த உலகத்தை படைக்க முடிந்த இறைவனுக்கு, நிச்சயம் இது ஒரு பெரிய செயலே அல்ல. தன்னுடைய வலிமையை நிரூபிப்பதற்காக கடவுள் இவற்றைச் செய்யவில்லை. மாறாக, மனிதர்கள் மகிழ்வோடு வாழ வேண்டும் என்பதற்காக இவற்றைச் செய்கிறார்.
இறைவனின் அன்பை முழுமையாக உணரக்கூடிய மனிதர்களால் தான், எந்த அளவுக்கு நாம் படைப்புகளுக்கெல்லாம் உயர்ந்த படைப்பாக இறைவன் நம்மை வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அந்த இறைவனிடத்தில் நம்மையே முழுவதுமாக ஒப்புக்கொடுத்து, இந்த திருப்பாடலை நாம் பாடி, இறைவனைப் போற்றுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்