ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக!
திருப்பாடல் 128: 1 – 2, 3, 4 – 5
நம்முடைய கடவுள் ஆசீர்வாதத்தின் கடவுள் என்று விவிலியம் முழுவதிலும் நாம் வாசிக்க முடியும். வரலாற்றில் கடவுள் பேசிய வார்த்தைகளாக விவிலிய ஆசிரியர்கள் கருதுவது, கடவுளுடனான ஆபிராமின் உரையாடல் தான். அதிலும் இந்த ஆசீர்வாதம் தான் முழுமையாகச் சொல்லப்படுகிறது. தொடக்கநூல் 12 வது அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம்: ”உனக்கு ஆசி வழங்குவேன். நீயே ஆசியாக விளங்குவாய்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆக, கடவுள் ஆசீர்வாதத்தின் தேவனாக இருக்கிறார்.
கடவுளின் ஆசீர்வாதம் எந்நாளும் நம்மோடு தங்கியிருக்கிறது. நாம் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பதற்குக் காத்திருக்கிறார். நாம் அவருக்கு எதிராக குற்றங்களைச் செய்தாலும், அவற்றையெல்லாம் மன்னித்து ஏற்றுக்கொண்டு, நம்மை நிறைவாழ்வை நோக்கி அழைத்துச் செல்கிறவராக இறைவன் இருக்கின்றார். கடவுள் எப்போதும் நமக்காகவே இருக்கிறார். நாம் நன்றாக வாழ வேண்டும், மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே கடவுளின் நோக்கமாக இருக்கிறது. அந்த கடவுளின் எண்ணத்தை நமது வாழ்வில் நாம் பிரதிபலிப்போம்.
ஆசீர்வாதம் தரக்கூடிய இறைவன் நம்மோடு இருக்கிறபோது, நிச்சயம் அது நமக்கு மிகப்பெரிய பேறு. பெறுதற்கரிய பேறு. அதிலும், நம்மை ஆசீர்வதிக்கிறபோது, நமது குற்றங்களை அவர் கண்ணோக்குவதில்லை. அதையெல்லாம் விடுத்து, அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார். அதனை முழுமையாகப் பெற்றுக்கொள்ள உறுதிஎடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்