ஆண்டவர் ஒருவரே நம்மை வழிநடத்துவார்.
கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நம்மத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
இந்த நாளிலும் நம்முடைய தேவனாகிய ஆண்டவர் நம் ஒவ்வொருவருடன் கூடவே இருந்து நமது கரம் பிடித்து நம்மை வழிநடத்துவார். அதுக்கு நாமும் அவருடைய வார்த்தையை அசட்டை செய்யாதபடிக்கு ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தையை வாசித்து தியானித்து அதன்படியே நடந்தோமானால் நம்மை எந்த தீங்கும் அணுகாமல் வலக்கரம் பிடித்து நம்மை வழிநடத்துவார். நாம் தெரியாமல் வலப்பக்கம் இடப்பக்கம் சாயும்பொழுது வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று
உணர்த்தி காத்தருள்வார்.
நாம் 1 சாமுவேல் 14ம் அதிகாரத்தை வாசிப்போமானால் அதிலே இஸ்ரேயேல் ஜனங்களுக்கு எதிராக பெலிஸ்தியர் எல்லைக் காவலை வைத்து இஸ்ரயேல் ஜனங்களை சிறைப்பிடிக்க எல்லா ஏற்பாடும் செய்து வைத்திருந்தினர். ஆனால் சவுலின் குமாரன் யோனத்தான் ஆண்டவர் பேரில் உள்ள நம்பிக்கையால் தனது ஆயுததாரியாகிய வாலிபனிடம் விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்த தாணையத்திற்குப் போவோம் வா: ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு
காரியம் செய்வார்.அநேகம்பேரைக் கொண்டாகிலும் கொஞ்சம் பேரைக்கொண்டாகிலும் நம்மை மீட்க ஆண்டவருக்கு எந்த தடையும் இல்லை என்று சொல்கிறான். அப்பொழுது அந்த வாலிபன் உமது இருதயத்தில் இருக்கிறபடியே செய்யும். அப்படியே போவோம். நானும் உம்மோடு கூட வருகிறேன் என்றான்.
அப்பொழுது ஆண்டவரிடம் ஒரு அடையாளத்தை காட்டும்படி வேண்டி அங்கு போகின்றனர். இவர்கள் நினைத்தபடியே பெலிஸ்தியர் எங்களிடம் ஏறி வாருங்கள், உங்களுக்கு புத்தி கற்பிப்போம் என்கிறார்கள் அப்பொழுது யோனத்தான் வாலிபனிடம் என் பின்னாலே ஏறி வா கர்த்தர் அவர்களை இஸ்ரயேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி இருவரும்,தைரியமாக எந்த ஒரு ஆயுத படையும் இல்லாமல் கர்த்தரின் துணையோடு மாத்திரம் செல்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை கண்ட ஆண்டவர் அவர்கள் எண்ணப்படியே அவ்வளவு பெரிய சேனையை இந்த இருவர் கையில் ஒப்புக்கொடுத்து மகா வெற்றியை அருள்கிறார்.அதோடு அல்லாமல் பூமியை அதிரப்பண்ணி பெலிஸ்தியர் திகில் அடையும் படி செய்கிறார். ஆண்டவரே தமது மக்களுக்காக போரிட்டு மாபெரும் காரியத்தை இருவரைக் கொண்டே நிறைவேற்றுகிறார்.
எனக்கன்பானவர்களே! நம்முடைய ஆண்டவர் பெரியவரும் வல்லவரும்,மகத்துவமும் உள்ள கடவுளாய் இருக்கிறார். நம் ஒருவரை கொண்டு அவர் செய்ய நினைத்ததை செய்வார். அதற்கு நம்மிடம் விசுவாசத்தை, அவர்மேல் நம்பிக்கையை வைக்கும்படி எதிர்பார்க்கிறார். அவர் எதிர் பார்க்கும் நம்பிக்கையை நாம் அவர்மேல் வைத்தால் நாம் நினைக்காத அளவுக்கு பெரிய காரியத்தை நமக்கு கட்டளையிடுவார். அவர் ஒருவரே நம்மோடு கூட இருந்து வழிநடத்தி பாதுகாத்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள அருள் புரிவார்.
ஜெபம்
அன்பே உருவான இறைவன் ஒருவரே நம்மோடு கூட இருந்து நமது தேவைகள் யாவையும் சந்தித்து ஒவ்வொருநாளும் எந்த தீங்கும் நம்மை தொடாதபடிக்கு காத்து வருகிறார் .நீர் மாறாதவராய் இருந்து எங்கள் குறைகளை எண்ணாமல் குற்றங்களை பாராமல், கரம் பிடித்து காப்பாற்றுகிறீர். எங்கள் பாவங்களுக்காக உம்மையே தியாகப் பலியாக ஒப்புக்கொடுத்து உமது உயிரை கொடுத்தீர். உமக்கு நன்றி ஆண்டவரே. உமக்கு நாங்கள் என்னத்தை திருப்பி கொடுப்போம். எங்களையே உமக்கு அர்ப்பணிக்கிறோம். நீரே பொறுப்பெடுத்து உமது சித்தப்படியே காத்து ஆசீர்வதித்து வழிநடத்தவேண்டுமாய் உம்மை கெஞ்சுகிறோம். நீர் ஒருவரே போதுமானவராய் இருக்கிறீர். உம்மையே பற்றிக்கொண்டு வாழ கற்றுத்தாரும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் நல்ல நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் ஜீவனுள்ள தந்தையே.ஆமென் !! அல்லேலூயா!!!.