ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்
திருப்பாடல் 145: 1 – 2, 8 – 9, 10 – 11, 13 – 14
ஒரு குழந்தை, தான் பெற்றோர்களிடத்தில் அன்பு கொண்டிருக்கிறேன் என்பதை எப்படி வெளிக்காட்டும்? அந்த குழந்தைக்கு அடுக்கு மொழி வார்த்தைகள் தெரியாது. எப்படிப் பாராட்டிப் பேச வேண்டும் என்கிற இலக்கணம் தெரியாது. ஆனால், மழலை மொழியில், தாய் அல்லது தந்தையின் பெயரை மீண்டும் மீண்டும் உச்சரித்துக்கொண்டேயிருக்கும். அதுதான் ஒரு குழந்தை தன் பெற்றோரின் மீதோ, தான் அன்பு கொண்டிருக்கிறவர் மீதோ, தன்னுடை உண்மையான பாசத்தை வெளிப்படுத்துகின்ற முறை.
இன்றைய திருப்பாடல், அப்படிப்பட்ட குழந்தை உள்ளம் கொண்ட ஆசிரியரின் உள்ளத்து உணர்வுகளை பாடலாக நமக்குத் தருகிறது. இந்த திருப்பாடலில் மீண்டும், மீண்டும் கடவுள் நல்லவர் என்கிற வரிகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த வரிகள் கடவுளின் மீது, ஆசிரியர் கொண்டிருக்கிற உண்மையான மதிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கடவுளின் அன்பை முழுமையாக உணர்ந்த ஒருவரால் தான், இப்படிப்பட்ட வரிகளை எழுத முடியும். ஆக, கடவுளின் அன்பை முழுமையாக உணர்ந்ததோடு நின்றுவிடாமல், தான் பெற்ற அன்பை, எல்லாரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற பரந்த எண்ணத்தோடு, இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது. இறைவனின் அன்பையும், இரக்கத்தையும் நாமும் முழுமையாக உணா்ந்தவர்களாக இந்த திருப்பாடலை தியானிக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
இறைவனின் அன்பை நம் வாழ்வின் முக்கிய தருணங்களில் நாம் அவ்வப்போது சிந்தித்துப் பார்க்க வேண்டும். இறைவன் எந்நாளும் நம்மைக் காக்கின்றவராக இருக்கிறார். அவரது இரக்கத்தில் முழுமையாக நம்பிக்கை வைக்கிறவர்களாக, நமது வாழ்வை நாம் மாற்றுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்