ஆண்டவர் எப்பொழுதும் சினம் கொள்பவரல்லர்
திருப்பாடல் 103: 1 – 2, 3 – 4, 8 – 9, 11 – 12
கோபப்படக்கூடிய மனிதர்களை பல வகைகளாக நாம் பிரிக்கலாம். எதற்கெடுத்தாலும் கோபப்படக்கூடிய மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தொட்டதெற்கெல்லாம் கோபப்படக்கூடியவர்கள். இது ஒரு வகையான உளவியல் நோய். அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சில நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு, இந்த உளவியல் நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள். இரண்டாவது வகையான மனிதர்கள், தங்களை மறந்து கோபப்படக்கூடியவர்கள். அவர்களை அறியாமலேயே, இயல்பாகவே கோபத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள். தாங்கள் செய்வது சரியா, தவறா என்கிற சிந்திக்கிற திறன் இல்லாமல், கோபப்படக்கூடியவர்கள். இதுவும் ஓர் உளவியல் சிக்கல் தான். என்றாலும், விழிப்புணர்வோடு இருந்து முயற்சி எடுக்கிறபோது, இந்த சிக்கலிலிருந்து நாம் மீள முடியும்.
கடவுள் சினம் கொள்கிறார் என்பது இதுபோன்ற மனிதர்களோடு ஒப்பிட்டுக்கூறக்கூடியது அல்ல. அது நீதி அவமதிக்கப்படுகிறபோது எழுகிற கோபம். நேர்மையாளர்கள் அநியாயமாக தண்டிக்கப்படுகிறபோது உண்டாகிற கோபம். வலியவன் எளியவனை சுரண்டுகிறபோது ஏற்படக்கூடிய இயல்பான கோபம். இந்த கோபம் நியாயமான கோபம். இந்த கோபத்தை கடவுள் அடைந்தாலே, இந்த உலகம் தாங்க முடியாது. ஏனென்றால், அந்த அளவுக்கு நெறிகேட்டாளர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், கடவுள் மிக மிக பொறுமையைக் கையாளுகிறவராக இருக்கிறார். கடவுளின் கோபத்தை எவராலும் தாங்க முடியாது என்பதற்காக, அவர் பொறுமையைக் கடைப்பிடிக்கிறார். அந்த பொறுமையை நாம் தவறாக எடுத்துக்கொண்டு, மேலும் மேலும் கடவுளின் கோபத்தைத் தூண்டுவதை விட்டு விட்டு, கடவுள் காட்டக்கூடிய வழியில் நமது வாழ்வை அமைத்துக்கொள்ள இந்த திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது.
நமது வாழ்வில் நாம் கடவுள் நம்மீது காட்டுகிற அன்பை முழுமையாக உணர்ந்து, அவரது அன்பிற்கு நம்மையே தகுதியுள்ளவர்களாக நாம் மாற்றிக்கொள்வோம். கடவுளின் அன்பைப் பெற, கடவுள் நமக்கு காட்டுகிற வழியில், நமது வாழ்வை அமைத்துக்கொள்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்