ஆண்டவர் இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப்பெறுவாராக
திருப்பாடல் 113: 1 – 2, 3 – 4, 5 – 7
இன்றைய திருப்பாடல் வரிகள் அற்புதமான சிந்தனையைத் தூண்டக்கூடிய வரிகள். கடவுள் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை ஆழப்படுத்துகிற வார்த்தைகள். ஆண்டவரின் ஊழியர்களை கடவுளைப் புகழ்ந்து பாடுவதற்கு ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். ஆண்டவரின் ஊழியா்கள் யார்? கடவுள் பணிக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்களே கடவுளின் ஊழியா்கள். அந்த கடவுளின் ஊழியர்கள் சுயநலம் இல்லாதவர்கள். ஆண்டவருக்காகவே வாழ்கிறவர்கள்.
கடவுளின் ஊழியர்கள் இப்போது போற்றிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்திலும் இதே போற்றுதலை கடவுளுக்கு கொடுப்பார்களா? தெரியாது. சூழ்நிலைகள் அவர்களுடைய விசுவாசத்தை ஆட்டம் காணச் செய்யலாம். ஆனாலும், அவர்கள் எல்லா காலத்திலும் கடவுளைப் போற்ற வேண்டும் என்பதுதான் ஆசிரியரின் வேண்டுகோள். இப்போது மட்டுமல்ல, எல்லா காலத்திலும், வேளையிலும் கடவுளைப் போற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை ஆசிரியர் வைக்கிறார். நம்முடைய விசுவாசத்தை சூழ்நிலைகள் மாற்ற விடக்கூடாது. நாம் சூழ்நிலைக் கைதிகளாகவே இருக்கக்கூடாது என்பதுதான் இங்கே நமக்கு விடுக்கப்படுகிற செய்தி.
நம்முடைய வாழ்வில் நாம் எந்த அளவுக்கு கடவுள் மீது முழுமையான விசுவாசத்தை வைத்திருக்கிறோம்? நம்முடைய விசுவாசம் நாம் நன்றாக வாழ்கிறபோது மட்டும் தானா? அல்லது எல்லா இடத்திலும், வேளையிலும் நிலைத்திருக்கிறதா? என்று சிந்தித்து, அதற்கேற்ப செயல்படுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்