ஆண்டவர் அளிக்கும் விடுதலையைக் குறித்து அகமகிழ்வேன்
திருப்பாடல் 9: 1 – 2, 3 & 5, 15 & 18
இறைவனை விடுதலை தருகிறவராக இந்த திருப்பாடல் அறிமுகப்படுத்துகிறது. யாரிடமிருந்து விடுதலை? எதிலிருந்து விடுதலை? மத்திய கிழக்குப் பகுதியில் நாடுகள் மற்ற நாடுகளை போரில் வென்று அடிமைப்படுத்துவதும், தங்களை வலிமையானவர்களாகக் காட்டிக்கொள்ள, அரசர்கள் பலரை வெட்டி வீழ்த்துவதும் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தது. இப்படிப்பட்ட பிண்ணனியில் இந்த பாடல், கடவுளை நம்புகிறவர்கள் அடிமைத்தனத்திலிருந்தும், தீமைகளில் இருந்தும், விடுதலை பெறுவார்கள் என்கிற செய்தியை அறிவிக்கிறது.
இன்றைய உலகில் நாம் சந்திக்கிற பிரச்சனைகள் ஏராளம். நேர்மையாக வாழ்கிறவர்கள் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். கடின உழைப்பின் மூலமாக நாம் முன்னேறுகிறபோது, மற்றவர்கள் நம்மைப்பார்த்து பொறாமைப்படுகிறார்கள். நம்முடைய வளர்ச்சியில் காழ்ப்புணர்வு கொள்கிறார்கள். நம்மை பழித்துரைக்கிறார்கள். ஆனால், ஆண்டவரிடம் நம்மையே நாம் ஒப்படைக்கிறபோது, கடவுள் நம்மை பாதுகாப்பார். எல்லாவிதமான தீமைகளில் இருந்தும், அவர் நம்மை பாதுகாப்பாக வழிநடத்துவார். நமக்கு எதிராக எத்தனை பேர் எதிர்த்து நின்றாலும், கடவுளின் அன்பும், அருளும் நம்மோடு இருக்கிறபோது, நாம் விடுதலை பெற்றவர்களாக, இறைவனின் பிள்ளைகளாக வாழ்கிறோம்.
தீமைகள் நம்மை சூழ்ந்து வருகிறபோது, நாம் கலங்க தேவையில்லை. விடுதலையின் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்கிற சிந்தனை நம்முடைய உள்ளத்தில் பதிக்கப்படட்டும். விடுதலையின் ஆண்டவர் நமக்கு விடுதலையைத் தருவார். நம்மை பாதுகாப்பாக வழிநடத்துவார்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்