ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து
திருப்பாடல் 16: 1 – 2&5, 7 – 8, 11
உரிமைச்சொத்து என்கிற வார்த்தையின் பொருள் என்ன? எண்ணிக்கை 18: 20 சொல்கிறது: ”இஸ்ரயேல் மக்களிடையே உனக்கு பங்கும், உரிமைச் சொத்தும் நானே”. இந்த வார்த்தைகளை ஆரோனுக்கு ஆண்டவர் சொல்கிறார். ஆரோன் ஆண்டவரால், இறைப்பணிக்காக அர்ப்பணம் செய்யப்பட்டவர். ஆரோனின் வழிவரக்கூடிய குருக்கள் அனைவருக்கும் முன்னோடி ஆரோன். உரிமைச் சொத்து என்பது நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு. ஒரு குடும்பத்தில் நான்கு சகோதரர்கள் இருக்கிறார்கள். தந்தையின் சொத்தில் நான்கு பேருக்குமே பங்கிருக்கிறது. தந்தை விரும்புகிறாரோ இல்லையோ, சட்டத்தின்படி, தந்தையின் சொத்தில், மகனுக்கு பங்கு இருக்கிறது. அதில் ஒரு சில உள்விவகாரங்கள் இருந்தாலும், பொதுவான எண்ணம்: தந்தையின் சொத்தில் மகனுக்கு பங்கு உண்டு என்பதுதான்.
இங்கு ஆரோனுக்கு, கடவுள் உரிமைச்சொத்தாக கொடுக்கப்படுவது என்பது, இறைவனின் பணியாளர்களுக்கு கொடுக்கப்படக்கூடிய மிகப்பெரிய விலைமதிப்பில்லாத பரிசு. இந்த உலகத்தையே கொடுத்தாலும் பெற முடியாத பொக்கிஷம். கடவுளின் பணியாளர் என்பவர் தனிப்பட்ட மனிதர் அல்ல. அவரோடு ஆண்டவர் இருக்கிறார். அவரை வழிநடத்துகிறார். அவரை பாதுகாக்கிறார். அவருக்கு தேவையான எல்லாவற்றையும் செய்துகொடுக்கிறார். மக்களை வழிநடத்த அவரை ஞானத்தாலும், ஆற்றலாலும் ஆண்டவர் அவரை நிரப்பக்கூடியவராக இருக்கிறார். இறைவனை உரிமைச்சொத்தாகப் பெற்றிருக்கிற, இறைவனின் பணியாளர்களுக்கு நாம் உரிய மரியாதையையும், மதிப்பையும் கொடுப்பதற்கு இந்த பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது.
இறைவனை உரிமைச்சொத்தாக்கிக் கொண்டவர்கள் இறைவனின் பணியாளர்கள் மட்டுமல்ல. நல்ல எண்ணத்தோடு, தூய்மையா உள்ளத்தோடு வாழ முயற்சி எடுக்கிற அனைவருமே, இறைவனை உரிமச்சொத்தாகப் பெற்றிருக்கிறார்கள். நாமும் இறைவனை உரிமைச் சொத்தாக பெற உறுதி எடுப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்