ஆண்டவர்க்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்
திருப்பாடல் 98: 1, 7 – 8, 9
ஆண்டவர்க்குப் புதியதொரு பாடல் பாட திருப்பாடல் ஆசிரியர் அழைப்பு விடுக்கிறார். ஆண்டவர்க்கு எதற்காக புதியதொரு பாடல் பாட வேண்டும்? பொதுவாக, இஸ்ரயேல் மக்களின் செபமானது, ஏற்கெனவே தொகுத்து எழுதப்பட்ட இறையனுபவத்தின் வரிகளை மீண்டுமாக நினைவுகூர்வது ஆகும். எகிப்திலிருந்து பாலைவனத்தின் வழியாக, அவர்களை அற்புதமாக விடுவித்தபோது, அவர்கள் சந்தித்த இறையனுபவம் தான், அவர்களுக்கு பாடலாக தரப்பட்டிருந்தது. ஆனால், இப்போது புதியதொரு பாடலைப் பாட ஆசிரியர் அழைப்பு விடுப்பதன் நோக்கம் என்ன?
யாவே இறைவன் வரலாற்றில் மட்டும் இல்லை. இன்றும் இருக்கிறார் என்பதை இந்த திருப்பாடல் உணர்த்துகிறது. வழக்கமாக, தெய்வங்களை நாம் வணங்குகிறபோது, அவர்கள் இதுவரை செய்து வந்த அற்புதங்களை நினைவுபடுத்தி, நாம் அவர்களை வழிபடுவோம். யாவே இறைவனைப்பொறுத்தவரையில், அவரது வல்ல செயல்கள் வரலாற்றோடு முடிந்துவிடவில்லை. இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. நிகழ்காலத்திலும் ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அது முடிந்து போனது அல்ல, மாறாக, தொடர்ச்சியானது. அந்த தொடர்ச்சியைத்தான் நாம் பாட வேண்டும் என்று அழைப்புவிடுக்கப்படுகிறது.
இறைவனின் செயல்கள் முற்காலத்தோடு முடிந்துவிடவில்லை. இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது. அவரது பிரசன்னத்தை இன்றும் நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம். அந்த இறைவனின் அருளை நாம் நிறைவாகப் பெற்றவர்களாக வாழ, இந்த திருப்பாடலை பக்தியுடன் தியானிப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்