ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்
திருப்பாடல் 34: 1 – 2, 15 – 16, 17 – 18
ஆண்டவரை எல்லா காலத்திலும், எல்லா நேரத்திலும் புகழ்வதாக திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். இது ஒரு முதிர்ச்சியான மனநிலையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. ஆண்டவரை எக்காலமும் போற்றுவது என்பதன் பொருள் என்ன? மனித மனம் வித்தியாசமானது. நம்மிடத்தில் நன்றாக இருக்கிறவர்களிடம் நன்றாக இருப்பதும், நம்மிடம் ஒரு தூரத்தை விரும்புகிறவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதும் மனித மனமாக இருக்கிறது. இந்த பார்வை கடவுளுடன் நாம் கொண்டிருக்கிற உறவிலும் செயல்படுகிறது.
கடவுளிடமிருந்து நாம் நிறைவாகப் பெற்றுக்கொண்டிருக்கிறபோது, நாம் கடவுளிடம் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். கடவுளைப் போற்றுகிறோம். கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். ஆனால், கடவுளிடத்தில் நாம் கேட்டது கிடைக்கவில்லை என்றாலோ, நாம் நினைத்தது போல வாழ்க்கை அமையவில்லை என்றாலோ, கடவுளை விட்டு விலகிச்செல்கிறோம். கடவுளைப் போற்றுவதற்கோ, புகழ்வதற்கோ நமக்கு மனம் வருவதில்லை. இது சாதாரண மனித இயல்பு. இதனைக் கடந்து வாழக்கூடிய வாழ்வை, இந்த திருப்பாடல் நமக்கு நினைவூட்டுகிறது. அதுதான் மனிதர்கள் வாழ வேண்டிய சரியான வாழ்க்கை முறையாகவும் நமக்கு கற்றுத்தருகிறது.
நம்முடைய வாழ்வில் நாம் எப்பொழுதும் கடவுளைப் போற்றுகிறவர்களாக இருக்கிறோமா? கடவுள் நமக்கு நன்மைகளைச் செய்தாலும், நம்முடைய வாழ்வில் துன்பங்கள் வந்தாலும் அவரிடத்தில் நாம் கொண்டிருக்கிற பாசமும், நேசமும் தொடர்கிறதா? என்று சிந்தித்துப் பார்ப்போம். அதன்படி நம்முடைய வாழ்வை அமைத்துக்கொள்ள நாம் முனைப்புகாட்டுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்