ஆண்டவரை நம்புவோரே! உங்கள் உள்ளம் உறுதிகொள்வதாக!
திருப்பாடல் 31: 19 – 20a, 20bc, 21, 22, 23
தாவீது அரசர் அவருடைய வாழ்நாட்களில் சவுல் அரசரிடமிருந்து அதிகமான துன்பங்களை எதிர்கொண்டார். தாவீது, மக்களால் தன்னைவிட அதிகமாக நேசிக்கப்படுவதை அறிந்த சவுல் அரசர், தாவீதை ஒழித்துக்கட்ட விரும்பினார். அவருடைய கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக, தாவீது ஓடிக்கொண்டே இருந்தார். பலமுறை மயிரிழையில் அவர் உயிர் தப்பினார். அந்த நேரங்களில் கடவுள் மீது தான் வைத்திருந்த நம்பிக்கை தான், தன்னை முழுமையாகக் காப்பாற்றியதாக அவர் உணர்ந்தார். அந்த நேரத்தில் நம்பிக்கை கொள்வது வெகு எளிதானது அல்ல. அதைத்தான் இந்த திருப்பாடலில் தாவீது அரசர் பாடுகிறார்.
கடவுளிடத்தில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறபோது, நிச்சயமாக பலவிதமான சோதனைகள் நம்மை தாக்கிக்கொண்டே இருக்கும். அந்த சோதனைகள் தொடர்ச்சியாக வரும்போது, நமக்குள்ளாக எழக்கூடிய கேள்விகள், ஏன் எனக்கு தொடர்ச்சியாக துன்பங்கள் வந்து கொண்டிருக்கிறது? இந்த துன்பங்களில் கடவுள் எங்கே சென்றார்? என்னுடைய முழுமையான நம்பிக்கையை நான் ஆண்டவரில் தானே வைத்தேன் என்று, நமக்குள்ளாக நெருக்கடிகள் கிளம்பும். அந்த தருணத்தில் நாம் உறுதியோடு இருக்க வேண்டும். நமது விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
அன்றாட வாழ்வில் இந்த உறுதி நம்மில் பலருக்கு இல்லாமல் போவது வேதனையான ஒன்று. விசுவாசத்தில் உறுதியை நமக்கு வாழந்து காட்டியவர்கள் தான், நமது புனிதர்கள். நாமும் விசுவாசத்தில் உறுதியாக இருக்கிற மனநிலை வேண்டி, இந்த திருப்பாடலில் நாம் மன்றாடுவோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்