ஆண்டவரையே நம்பியிரு. அவரே உன் சார்பில் செயலாற்றுவார்
ஆண்டவரை நம்பியிக்க திருப்பாடல் (திருப்பாடல் 37: 3 – 4, 18 – 19, 27 – 28, 39 – 40) ஆசிரியர் வேண்டுகோள் விடுக்கிறார். ”நம்புதல்” என்கிற வார்த்தையின் பொருள் என்ன? நம்பிக்கை என்பது கடவுள் இருக்கிறார் என்று திருப்திப்பட்டுக்கொள்வது கிடையாது. இந்த உலகத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என இரண்டு வகைகளாக மனிதர்களைப் பார்க்கலாம்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் யார்? கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவர்கள். அவர்கள் கடவுளைப் பார்த்தது கிடையாது. ஆனால், அது ஒருவிதமான நம்பிக்கை. கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் யார்? கடவுள் இருக்கிறார் என்பதை நம்பாதவர்கள். இவர்கள் அறிவியல்பூர்வமாகச் சிந்திக்கக்கூடியவர்களாகவும் இருக்கலாம். இங்கு நம்பிக்கை என்று சொல்லப்படுவது, கண்ணால் காண முடியாத கடவுள் ஒருவர் இருக்கிறார் என்கிற வெறுமனே நம்பிக்கை மட்டும் அல்ல, மாறாக, இந்த இறைவன் என்னை அன்பு செய்கிறார் என்கிற உறுதிப்பாடு. அவர் என்னை வழிநடத்துகிறார் என்கிற ஆழமான உணர்வு. இதுதான் உண்மையான நம்பிக்கை. அப்படிப்பட்ட நம்பிக்கையை வைக்க, ஆசிரியர் நமக்கு அழைப்புவிடுக்கிறார். அந்த நம்பிக்கை நமக்குள்ளாக இருக்கிறபோது, நம்மை அறியாமலேயே கடவுள் நம்மில் இருந்து, செயல்படுவதை நம்மால் பார்க்க முடியும். கடவுள் நம்மை வழிநடத்துவதை உணர முடியும். இதனை அறிவியல்பூர்வமாக நம்மால் எடுத்துரைக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், அனுபவப்பூர்வமாக நம்மால் உணர வைக்க முடியும். அப்படிப்பட்ட உண்மையான நம்பிக்கையை கடவுளிடம் நாம் வைப்பதற்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
நமது விசுவாச வாழ்க்கையில் இத்தகைய நம்பிக்கையைக் கொண்டிருக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். கடவுளின் இந்த அன்பையும், இரக்கத்தையும் ஆழமாக விசுவசிக்கிறவர்களாக நாம் வாழ முற்படுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்