ஆண்டவரையும், அவரது ஆற்றலையும் தேடுங்கள்
திருப்பாடல் 105: 4 – 5, 6 – 7, 8 – 9
”ஆண்டவரையும், அவரது ஆற்றலையும் தேடுங்கள்”
திருப்பாடல்களில் பெரும்பாலான பாடல்கள் கடவுளைப் போற்றுவதற்கும், புகழ்வதற்குமானது. இந்த புகழ்ச்சிப்பாடல்களில் ஒரு சில பாடல்கள் மிகச்சிறியதாகவும், ஒரு சில பாடல்கள் மிக நீண்டதாகவும் காணப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது என்றால், கடவுளைப் புகழ்வதற்கு நீண்ட பாடல்கள் தேவையில்லை. மாறாக, நல்ல தூய்மையான மனநிலை தான் அவசியம். எவ்வளவு நீளமாக நாம் பாடுகிறோம், வாழ்த்துகிறோம் என்பது முக்கியமல்ல, எந்த மனநிலையோடு நாம் கடவுளைப் போற்றுகிறோம், புகழ்கிறோம் என்பதுதான், இங்கே நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடமாக இருக்கிறது.
கடவுளையும், அவரது ஆற்றலையும் தேட வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கின்றார். எதற்காக கடவுளையும், அவரது ஆற்றலையும் நாம் தேட வேண்டும்? இந்த உலகம் வாழ்வதற்கு கடினமானது. இங்கே நாம் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் ஏராளமாக இருக்கிறது. ஒவ்வொருநாளும் நாம் விழித்தெழுகிறபோது, பிரச்சனைகள் இல்லாத நாளாக இருக்க வேண்டும் என்று தான், நாம் செபிக்கிறோம். அந்த நாளில் கடவுளை வேண்டுகிறோம். நாம் அன்றாடம் சந்திக்கக்கூடிய வாழ்க்கைப்பிரச்சனைகளை நம் தனி ஒருவரால் நிச்சயம் எதிர்கொள்ள முடியாது. அதற்கு கடவுளின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அவரது ஆற்றல் தேவைப்படுகிறது. அவரது உடனிருப்பு தேவைப்படுகிறது. கடவுள் நம்மோடு இருக்கிறபோது, இந்த உலகத்தில் எந்த பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை நம்மால் எதிர்கொள்ள முடியும். எனவே, நாம் கடவுளின் ஆற்றலுக்காக, அருளுக்காக மன்றாட வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கின்றார்.
நமது வாழ்க்கையில் நாம் கடவுளிடம் தேவைகளுக்காக வேண்டுகிறோம். செல்வத்திற்காக வேண்டுகிறோம். புகழுக்காக மன்றாடுகிறோம். ஆனால், நாம் வேண்டுவது, கடவுளின் ஆற்றலுக்காக இருக்க வேண்டும். கடவுளின் வழிநடத்துதலுக்காக இருக்க வேண்டும். பிரச்சனைகளை அணுகுவதற்கு ஞானத்தைத் தருவதாக இருக்க வேண்டும்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்