ஆண்டவரைப் புகழ்ந்து போற்றுவார்களாக
திருப்பாடல் 149: 1ஆ – 2, 3 – 4, 5 – 6அ & 9ஆ
இஸ்ரயேல் மக்கள் தாவீது அரசரின் காலத்தில் தான், மற்றவர்களால் அஞ்சக்கூடிய ஓர் அரசாக வளர்ந்தனர். சவுல் அரசருடைய காலத்திலேயே இஸ்ரயேல் ஒரு நாடாக வளர ஆரம்பித்தாலும், மற்றவர்கள் பயப்பட ஆரம்பித்தது தாவீது அரசருடைய காலத்தில் தான். தாவீது அரசரின் காலத்தில் ஏராளமான வெற்றிகளை அவர்கள் பெற்றார்கள். எனவே, தாவீது எழுதிய திருப்பாடல்களில் பல பாடல்கள் போர்களில் பெற்ற வெற்றியின் பிண்ணனியில் அமைந்திருக்கும். இந்த பாடலும் அப்படிப்பட்ட பிண்ணனியில் அமைந்த பாடல் தான். கடவுளின் மீட்புச் செயல்களை புகழ்ந்து பாடக்கூடிய பாடலாக இது அமைந்திருக்கிறது.
இஸ்ரயேல் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். வாழ்வில் இனிமை கொண்டு இருக்க வேண்டும் என்று இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. ஏனென்றால், இஸ்ரயேல் மக்கள் இந்த உலகத்தைப் படைத்த கடவுளை தங்களின் தலைவராகப் பெற்றிருக்கிறார்கள். இந்த உலகத்தைப் படைத்த கடவுள் அவர்களோடு இருக்கிறார். அவர்களின் பகை நாட்டினருக்கு எதிராக அவர் அவர்களைக் காப்பாற்றுகிறார். அவர்களுக்கு அவர் மீட்பைத் தருகிறார். எனவே, இஸ்ரயேல் மக்கள் தங்களது வாழ்க்கையில் கவலை கொள்வதற்கு காரணமே இல்லை. எந்த பிரச்சனை வந்தாலும், அதிலிருந்து காப்பாற்றுவதற்கு ஆண்டவர் அவர்களோடு இருக்கிறார் என்பது இந்த திருப்பாடல் நமக்குத்தருகிற செய்தி.
நம்முடைய வாழ்விலும் கவலை கொள்வதனால் நாம் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர வேண்டும். கவலைகளிலிருந்து விடுதலை தருகிற ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பதை உணர வேண்டும். இறைவனின் முழுமையான வலிமையில் நம்முடைய நம்பிக்கையை வைப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்