ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்
தானியேல் 1: 39 – 40, 41 – 42, 43 – 44
படைப்புகள் அனைத்தையும் அழைத்து, இறைவனைப் புகழ்வதற்கு மூன்று இளைஞர்கள் அழைப்புவிடுக்கிறார்கள். இந்த பாடலை அவர்களின் உள்ளப்பெருக்கிலிருந்து வருகிற பாடலாக நாம் பார்க்கலாம். மகிழ்ச்சியின் நிறைவிலிருந்து வருகிற பாடலாக பார்க்கலாம். நாம் பல நாட்களாக காத்திருந்த ஒன்று, நம் கண்முன்னால் நடக்கிறபோது, நாம் அடைகிற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த மகிழ்ச்சியில், நாம் கடவுளைப் போற்றிக்கொண்டே இருப்போம். அதுதான் இந்த பாடலிலும் வெளிப்படுகிறது.
சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ என்கிற மூன்று இளைஞர்கள் கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருந்தவர்கள். கடவுளுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருந்தார்கள். தங்களைக் காப்பாற்றினால் தான் கடவுள் இருக்கிறார் என்பது அல்ல. தங்களைக் காப்பாற்றவில்லை என்றாலும், கடவுள் இருக்கிறார், அவர் மீது தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கை உண்மையானது என்பதை வெளிப்படுத்தியிருந்தார்கள். அந்த நம்பிக்கைக்காக தீச்சுவாலையில் தூக்கி எறியப்பட்டபோதும், கவலைப்படாமல் எதிர்கொண்டவர்கள். தாங்கள் யார் மீது நம்பிக்கை கொண்டிருந்தோமோ, அந்த ஆண்டவரின் அனுபவத்தை அவர்கள் பெற்றபோது, தாங்க முடியாத ஆனந்தத்தைப் பெற்றுக்கொண்டனர். அந்த ஆனந்தத்தின் நிறைவில் படைப்புக்களைப் போற்றிப் புகழ்கின்றனர்.
கடவுள் மீது நாம் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கிறபோது, கடவுள் நம்மை எப்போதும் கைவிட மாட்டார் என்பதற்கு, இந்த மூன்று இளைஞர்கள் சான்று பகர்ந்திருக்கிறார்கள். அவர்களைப் போல, நம்முடைய வாழ்வில் நாமும் எப்போதும், கடவுள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டவர்களாக வாழ்வோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்