ஆண்டவரைப்பற்றிய அச்சம் தூயது
திபா 19: 9
ஆண்டவரைப்பற்றி நாம் அஞ்ச வேண்டுமா? கடவுள் நம்மை அன்பு செய்கிறார். நம்மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார். நம் அனைவர் மீதும் அதிக இரக்கம் காட்டி வருகிறார். அப்படியிருக்கிறபோது, ஏன் கடவுளுக்கு நாம் பயந்து வாழ வேண்டும்? அச்சம் என்கிற வார்த்தையின் உண்மையான பொருளை அறிந்து கொண்டால், இதுபற்றி கேள்விகள் நமக்கு வராது. இங்கு அச்சம் என்று பயன்படுத்தப்படுகிற வார்த்தை, வெறும் பயத்தைக் குறிக்கக்கூடிய சொல் அல்ல. மாறாக, இறைவன் மீது வைத்திருக்கிற தனிப்பட்ட மரியாதையையும், மதிப்பையும், இறைவன் மீது வைத்திருக்கிற உண்மையான அன்பையும் குறிப்பதாக இருக்கிறது.
இறைவன் மீது நாம் வைத்திருக்கிற இந்த அச்சம் தான், நம்முடைய வாழ்க்கையில் பயன் தருவதற்கு உதவியாக இருக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகம், பல மடங்கு பலன் தரும் விதையாக மாறுவதற்கு நமக்கு அழைப்புவிடுக்கிறது. நம்முடைய வாழ்க்கையை விதைக்கு ஒப்பிடலாம். இந்த உலகத்தில் பிறக்கிற நாம் அனைவரும், விதைகளாக விதைக்கப்படுகிறோம். விதைகள் வளர்ந்து பலன் தருவது போல, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் பலன் தர வேண்டும். அப்படி பலன் தருவதற்கு, இறைவன் மீது வைத்திருக்கிற அச்சயம் அடித்தளம். இன்றைக்கு புனிதர்களின் வாழ்க்கை பல மடங்கு மற்றவர்களுக்கு பலன் தந்திருக்கிறது என்றால், அதற்கு அடிப்படைக்காரணம், அவர்கள் இறைவன் மீது வைத்திருக்கிற அச்சம்.
இறைவனை அன்பு செய்கிற நாம் அனைவரும் எப்போதும் அவருக்கு அஞ்சக்கூடியவர்களாக வாழ்வோம். அந்த அச்சம் நம்முடைய மனித வாழ்க்கையை நிறைவாக வாழ்வதற்கு, பலன் தரக்கூடிய வாழ்வாக மாறுவதற்கு நாம் இறைவனிடம் அச்சம் கொள்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்