ஆண்டவரே! வாழ்வின் வழியை நான் அறியச் செய்தருளும்
திருப்பாடல் 16: 1 – 2, 5, 7 – 8, 9 – 10, 11
இந்த உலகத்தில் வாழ்கிற மக்கள் அனைவரும் தங்களது பெயர்கள் வாழ்வின் ஏட்டில் எழுதப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காகத்தான் தங்கள் வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வாழ்வை தாங்கள் வாழ, சிறப்பான முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படி வாழ்வது எளிதல்ல. கடவுளுக்குரிய வாழ்வை நாம் வாழ ஆரம்பிக்கிறபோது, பல்வேறுவிதமான குழப்பங்கள் நம்மை ஆட்கொள்ளும். நாம் வாழக்கூடிய வாழ்க்கை சரியானதுதானா? என்கிற கேள்விகள் நமக்குள்ளாக எழத்தொடங்கும். ஏனென்றால், இந்த உலகம் பல தவறான எண்ணங்களை, மதிப்பீடுகளாக புகுத்திக்கொண்டிருக்கிறது. எது சரி? எது தவறு? என்று அறிய முடியாத அளவிற்கு நமக்குள்ளாக குழப்பங்கள் எழுந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து விடுதலை பெறுவதற்காக, திருப்பாடல் ஆசிரியர் கடவுளின் உதவியை நாடுகிறார்.
நாம் குழப்ப மனநிலையில் இருக்கிறபோது, கடவுள் நமக்கு வழிகாட்டுவதற்கு தயாராக இருக்கிறார். ஆகவே கடவுளின் உதவியை நாம் முழுமையாக நாடக்கூடியவர்களாக வாழ இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. வாழ்க்கையில் நாம் நல்லவர்களாக வாழ்கிறபோது, இயல்பாகவே நமக்கு சோதனைகள் எழத்தான் செய்யும். தினமும் காலை உணவை உண்ணும் நமக்கு, அதனுடைய சுவையோ, அல்லது நாம் உண்ணுவதோ பெரிதாக நமக்குத் தெரியாது. ஆனால், அன்றைக்கு நாம் ஒறுத்தல் செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அன்றைக்கு, இயல்பாகவே நமது நாவு, உணவுக்காக ஏங்க ஆரம்பித்துவிடும். அதாவது, இதுவரை ஒரு பொருட்டாக எண்ணாத காலை உணவு, இன்றைக்கு நமக்கு பல்வேறுவிதமான சோதனைகளைக் கொடுக்க ஆரம்பித்துவிடும். அதேபோலத்தான், நாம் இந்த உலகத்தோடு வாழ்கிறவரை, யாரும் நம்மை கண்டுகொள்ள மாட்டார்கள். நம் வாழ்வை, நாமே வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால், நாம் நல்லவர்களாக வாழ முடிவெடுத்துவிட்டால், அவ்வளவு எளிதாக, இந்த உலகம் நம்மை விட்டுவிடாது.
கடவுளின் வழிகாட்டுதல் நம் வாழ்வின் ஒவ்வொரு விநாடியும் நமக்குத் தேவையாக இருக்கிறது. நிச்சயம் கடவுள் நமக்கு உதவி செய்வதற்காக காத்திருப்பார். அவர் நமக்கு உதவி செய்வார். அவருடைய வழிகாட்டுதலில் நமது வாழ்வை அமைத்துக்கொள்ள நாம் தொடர்ந்து முயற்சி எடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்