ஆண்டவரே! நீர் மன்னிப்பவர்
திருப்பாடல் 86: 5 – 6, 9 – 10, 15 – 16
இந்த உலகத்தில் மன்னிக்க முடியாதவர்கள் பலர் இருக்கிறார்கள். மன்னிப்பைப் பற்றி அறியாதவர்களைப் பற்றியோ, அதனை நம்பாதவர்களையோ நாம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால், திறந்த உள்ளத்தோடு, கடவுளுக்கு பயந்து வாழக்கூடிய, மன்னிப்பதற்கு முயற்சி எடுக்கக்கூடிய மனிதர்களை நாம் சிந்தித்துப்பார்ப்போம். ஒருவேளை நாம் அந்த நிலையில் இருந்தால், நம்முடைய உணர்வுகள் எப்படி இருக்கிறது? என்று சிந்தித்துப்பார்ப்போம்.
மன்னிப்பது எளிதான காரியமா? நிச்சயம் இல்லை. அதனை எல்லாரும் சொல்லிவிட முடியாது. திறந்த உள்ளத்தோடு முயற்சி எடுத்தவர்களால் மட்டும்தான் சொல்ல முடியும். அதில் இருக்கிற சிக்கல்களை அவரால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும். மனிதர்களாகிய நாம் நமக்கெதிராக செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகளை மன்னிப்பதற்கு இவ்வளவுக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. கடவுளுக்கு எதிராக நாம் எவ்வளவு தவறுகளைச் செய்கிறோம். அருவருக்கத்தக்க வகையில் பேசுகிறோம். வெறுப்புணர்வோடு நடந்து கொள்கிறோம். நன்றியில்லாதவர்களாக இருக்கிறோம். இவ்வளவையும் கடவுள் மன்னிக்கிறார் என்றால், அதனால் தான் அவர் கடவுள். எனவே தான், திருப்பாடல் ஆசிரியர் கடவுளை “மன்னிக்கிறவர்“ என்கிற உயர்ந்த சிந்தனையோடு பார்க்கிறார்.
கடவுளை மன்னிக்கிறவராக பார்க்கிற நாம், அந்த உயர்ந்த பண்பை நம்முடைய வாழ்வில் பெற்றுக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். அது எளிதானது அல்ல. ஆனாலும், அதனை நாம் நல்ல முறையில் மன்னிக்கிற பண்பை, நம்முடைய வாழ்வாக்கிக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்