ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கிறீர்
திருப்பாடல் 139: 1 – 3அ, 3ஆ – 6, 7 – 8, 9 – 10
கடவுள் ஒருவர் தான் மனிதர்களை முழுமையாக அறிந்திருக்கிறார். அவர் ஒருவர் தான், நம்முடைய உள்ளத்திற்குள்ளாக சென்று, நம்மை முற்றிலும் தெரிந்தவராக இருக்கிறார். நம்முடைய பலம், நம்முடைய பலவீனம் இரண்டையும் ஆண்டவர் அறிந்திருக்கிறார். இந்த ஞானத்தை திருப்பாடல் ஆசிரியர் இங்கு பாடலாக வெளிப்படுத்துகிறார். கடவுள் எப்போதும் நம்மை அறிந்து அன்பு செய்கிறவராக இருக்கிறார். அவரிடத்தில் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதுதான், இந்த திருப்பாடல் நமக்கு தரும் செய்தியாக இருக்கிறது.
திருப்பாடல் ஆசிரியர் ஆண்டவரிடம் கேட்பது என்ன? திருப்பாடல் ஆசிரியர் ஆண்டவரிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான். ஆண்டவர் அவரை முற்றிலும் அறிந்தவராயிருக்கிறதால், ஆண்டவரே அவரை வழிநடத்த வேண்டும் என்று, ஆசிரியர் விரும்புகிறார். ஆண்டவர் அவருடைய குறைகளை அறிந்திருக்கிறதனால், அவரை தீமையின் பக்கம் நெருங்கவிடாமல் பாதுகாத்துக் கொள்வார் என்பது, அவருடைய ஆழமான நம்பிக்கையாக இருக்கிறது. அவருடைய வாழ்க்கைக்கான முழுப்பொறுப்பையும் ஆண்டவரின் கரத்தில் ஒப்படைக்கிறார். அது தனக்கு பாதுகாப்பையும், வலிமையையும், தீங்கிலிருந்து விடுதலையையும் தரும் என்று உறுதியாக நம்புகிறார்.
நம்முடைய வாழ்வில் நாம் எப்போதும், கடவுளை நம்முடைய மீட்பராக ஏற்றுக்கொள்கிறபோது, இறைவனின் முழுமையான பராமரிப்பை உணர்கிறவர்களாக நாம் மாறுகிறோம். இறைவன் நம்மோடு என்றும் இருக்கிறார். அவருடைய கரம் நம்மை எப்போதும் பாதுகாக்கிறது. அந்த இறைவனிடத்தில் நம்முடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஒப்புக்கொடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்