ஆண்டவரே! நீர் உருவாக்கிய அனைத்தும் உமக்கு நன்றி செலுத்தும்
திருப்பாடல் 145: 10 – 11, 12 – 13, 21
கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார். இந்த உலகத்தில் இருக்கிற அனைத்துமே கடவுள் உருவாக்கியவை தான். ஆனால், கடவுளிடமிருந்து பலவற்றைப் பெற்றிருக்கிறவர்கள் நன்றி செலுத்துகிறார்களா? படைப்பு அனைத்தும் கடவுளை நினைத்துப் பார்க்கிறதா? இந்த கேள்விகள் அனைத்தையும் நாம் சற்று சிந்தித்துப் பார்க்கிறபோது, நாம் பெறுகிற பதில் நெருடலாகத்தான் இருக்கிறது. ஆனால், அந்த உண்மையை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். மனிதர்கள் நன்றி இல்லாதவர்களாக, படைத்தவரை மறக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
இந்த திருப்பாடலில், ஆசிரியர் ஒரு நம்பிக்கை விதையை விதைக்கிறார். அதாவது, நிச்சயம் இந்த உலகத்தில் இருக்கிற மனிதர்கள் என்றாவது ஒருநாள், கடவுளின் வல்லமையை நினைத்துப் பார்ப்பார்கள். அவருக்கு உரிய மரியாதையை தருவார்கள் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இந்த பாடல் அமைகிறது. ஒன்றை இழந்தால் தான், அதன் அருமை தெரியும் என்பார்கள். பலவற்றை நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த இயற்கையை நமது சுயநலத்திற்காக விற்றுக்கொண்டிருக்கிறோம். இந்த இயற்கையைச் சுரண்டிக்கொண்டிருக்கிறோம். இன்னும் சுரண்டலில் ஒளிந்து கொண்டிருக்கிற பேரழிவை உணர்வதற்கு நாம் தயாரில்லை. ஆங்காங்கே, அது பற்றிய விழிப்புணர்வு விதைக்கப்பட்டாலும், நம்மை ஆளுகிறவர்கள் அதனை அடக்கி ஒடுக்குவதற்குத்தான் முனைகிறார்கள். நிலத்தடி நீரை உறிஞ்சி பன்னாட்டு நிறுவனங்களக்கு விற்பது, ஆற்றுமணலை திருட்டுத்தனமாக அள்ளுவது, உச்ச நீதிமன்றமே தடைவிதித்தாலும் எப்படியாவது குறுக்குவழியில் மதுபானக்கடைகளைத் திறந்து, குடும்பங்களைச் சூறையாடுவது என, அதிகாரவர்க்கத்தினரின் சுயநலவெறியும், பணத்தின் மீதான பைத்தியமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
அழிவில் தான் நாம் பாடங்களைக் கற்க வேண்டுமானால், அது நடந்தே தீரும். கடவுள் நாம் அழிவதை விரும்பவில்லை என்றாலும், அப்படித்தான் இந்த மனித இனம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்