ஆண்டவரே! நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்
கடவுள் நம்மோடு எப்போதும் இருக்கிறார் என்று நம்புகிறோம். அப்படிப்பட்ட நம்பிக்கைக்கு மத்தியில் திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகள் நமக்கு ஒரு சில கேள்விகளை எழுப்புகிறது. நாம் மன்றாடுகிற நாளில் மட்டும் தான், கடவுள் நமக்கு உதவி செய்வாரா? நம்மை வழிநடத்துவாரா? நாம் மன்றாடவில்லை என்றால், அவர் நமக்கு துணைநிற்க மாட்டாரா? என்ற கேள்விகள் நம் உள்ளத்தை அரிக்கிறது. இதனை எப்படி புரிந்து கொள்வது?
கடவுள் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தார் என்கிற வரிகள், கடவுள் நமக்கு வழங்கியிருக்கிற சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. கடவுள் இந்த உலகத்தைப் படைத்து, நமக்கு வாழ்வையும் கொடுத்திருக்கிறார். எல்லாவற்றையும் கொடுத்த கடவுள், அவரே நம்மை இயக்கினால், நாம் பெற்றுக்கொண்ட வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனவே, அவர் நமக்கு சுதந்திரத்தை வழங்கியிருக்கிறார். நன்மை எது? தீமை எது? என்று கற்றுக்கொடுத்திருக்கிறார். தொடக்கநூலில் நமது முதல் பெற்றோரிடம், இந்த உலகத்தை ஒப்படைத்தபோது, கடவுள் இதைத்தான் சொல்கிறார். ”தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். ஆனால், நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே”. இங்கே கடவுள் எதைச் செய்ய வேண்டும்? எதைச்செய்யக் கூடாது? என்று தெளிவாகச் சொல்கிறார். ஆனாலும், மனிதன் தன்னுடைய சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகிறான். அதற்கான பலனையும் அனுபவிக்கிறான். கடவுள் நமக்குச் சுதந்திரத்தைக் கொடுத்து, நாம் தவறு செய்வதை வேடிக்கைப் பார்ப்பவரல்லர். நாம் உதவி என்று கேட்கிறபோது, அதனையும் நமக்குச் செய்வதற்கு காத்திருக்கிறார். இது கடவுள் எந்த அளவுக்கு நம்மை அன்பு செய்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
நமது வாழ்க்கையில் எப்போதும், கடவுளின் உதவியை நாட வேண்டும். கடவுள் நமக்கு உதவி செய்வதற்காக காத்திருக்கிறார். நாம் திக்கற்று நிற்கிறபோது, கடவுள் நிச்சயம் நமக்கு வழிகாட்டுதலாக இருப்பார். நம்மை எல்லாவித சோதனைகளிலுமிருந்து விடுவிப்பார்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்