ஆண்டவரே! நான் உம்மை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக
திருப்பாடல் 137: 1 – 2, 3, 4 – 5, 6
திருப்பாடல் என்பது ஒட்டுமொத்தமாக வரிசையாக எழுதப்பட்ட புத்தகம் அல்ல. பல்வேறு சூழ்நிலைகளில் எழுதப்பட்ட பாடல்கள் மொத்தமாக தொகுக்கப்பட்ட நூல் தான் திருப்பாடல். இன்றைய பல்லவியாக வந்திருக்கிற திருப்பாடல், இறைவாக்கினர்களின் இறுதிக்காலத்தில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பில் அடங்கிய பாடல். குறிப்பாக, பாபிலோனில் நாடுகடத்தப்பட்டு சிறைக்கைதிகளாக இருந்த சூழலில் எழுதப்பட்டது. தங்களை அடிமைப்படுத்தியவர்கள் தங்களை வசைமொழிகளால் அவமானப்படுத்தியபோது, உள்ளம் நொந்த மனநிலையில் எழுதப்பட்ட பாடலாகவும் இது தோன்றுகிறது. அதேவேளையில் பாபிலோனின் வீழ்ச்சி அண்மையில் இருக்கிறது என்பதை குறித்துக்காட்டும் நம்பிக்கையும் இந்த பாடலில் ஆங்காங்கே காணப்படுகிறது.
இஸ்ரயேல் மக்கள் பல நிலைகளில் தோல்விகளையும் அடிமைத்தனத்தையும் தங்களது வாழ்வில் அனுபவித்தவர்கள். அவமானங்களைச் சந்தித்தவர்கள். ஆனால், அவர்களிடத்தில் உலகமே வியந்த ஒரு பண்பு அவர்கள் ஒவ்வொரு முறையும் மீண்டு எழுந்து வந்தார்கள். அதற்கு அடிப்படையாக அமைந்தது அவர்களது கடவுள் நம்பிக்கை. கடவுள் எந்த நேரத்திலும் தங்களைக் கைவிட மாட்டார் என்கிற ஆழமான நம்பிக்கை தான், அவர்கள் சிறப்பான விதத்தில் எழுச்சி கொண்டதன் பிண்ணனியாக இருக்கிறது. தங்கள் கடவுளை முழுமையாக அறிந்திருந்தனர். தங்களது தவறுகளை கணப்பொழுதில் மன்னிக்கும் உன்னதமானவர் தாங்கள் வழிபட்ட யாவே இறைவன் என்பதில், அவர்கள் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த நம்பிக்கை தான், அவர்களை வெற்றிநடை போட வைத்தது.
நம்முடைய வாழ்விலும் உண்மையான கடவுள் அனுவத்தை நாம் பெற்றிருந்தால், நிச்சயமாக எந்த சூழ்நிலையிலும் நாம் சோர்ந்து போக மாட்டோம். கடவுளை விடாமல் பற்றிக்கொள்கிறவர்களாகத்தான் இருப்போம். இறையனுபவத்தைப் பற்றி இஸ்ரயேல் மக்களிடம் கற்றுக்கொள்வோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்