ஆண்டவரே! நான் உமக்கு நன்றிப்பலி செலுத்துவேன்
திருப்பாடல் 116: 10 – 11, 15 – 16, 17 – 18
வேதனையின் விளிம்பில் இருக்கிற ஒரு மனிதனின் புலம்பல் தான் இந்த திருப்பாடல். அவன் வேதனையின் உச்சத்தில் இருந்தாலும், கடவுளுக்கு நன்றியுள்ளவனாக வாழ ஆசைப்படுகிறான். கடவுளின் நன்றியை மறவாதவனாக இருக்கிறான். தன்னுடைய துன்பமான நேரத்திலும், சாதாரண மனிதர்கள் கடவுளைப் பழித்துரைப்பது போல அல்லாமல், தன்னுடைய வேதனையான நேரத்தில், கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்த ஆவல் கொண்டிருப்பதாக அவன் தன்னை வெளிப்படுத்துகிறான்.
பொதுவாக, துன்பம் நம்மைத் தாக்குகிறபோது, நமக்குள்ளாக எழக்கூடிய கேள்வி, கடவுள் எங்கே? அதிலும் குறிப்பாக, நம்பிக்கையோடு, கடவுளைப் போற்றி புகழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரின் உள்ளத்தில் இந்த கேள்வி தான், நிச்சயமாக எழும். எந்த ஒரு மனிதன் ஆன்மீகத்தில் பக்குவமடைந்திருக்கிறானோ, கடவுளைப் பற்றிய சரியான புரிதலைக் கொண்டிருக்கிறானோ, அவன் மட்டும் தான், கடவுளுக்கு எந்நாளும் நன்றிக்குரியவனாக இருக்க வேண்டும் என்று எண்ணுவான். நம்முடை வாழ்க்கையில் இத்தகைய ஆழமான ஆன்மீக அனுபவத்தைப் பெறுவதை, இந்த திருப்பாடல் உற்சாகப்படுத்துகிறது. நாம் சோர்ந்து போகாதபடிக்கு, எந்நாளும் கடவுளின் திருப்பெயரைப்போற்றிப்புகழ நமக்கு அழைப்புவிடுக்கிறது.
நம்முடைய ஆன்மீக முதிர்ச்சி எப்படி இருக்கிறது. சாதாரண துன்பங்களுக்கும் கடவுளை பழிகூறுகிறோமா? இல்லையென்றால், கடவுளின் மீது, நம்பிக்கை இழக்காதவர்களாக, இன்னும் அவரிடத்தில் ஆழமாக அன்பு கொள்கிறவர்களாக இருக்கிறோமா? என்று சிந்தித்துப் பார்த்து, கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக வாழ முயற்சி எடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்