ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்
தொடர்ந்து மூன்றாவது நாளாக அரசத் திருப்பாடலான திபா 72 ஐயே பதிலுரைப் பாடலாகப் பாடுகிறோம். “ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்” என்பதையே பல்லவியாக வேண்டுகிறோம்.
இன்று 14, 15, 17 என்னும் மூன்று வசனங்களையும் நாம் நம்முடைய சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம். “அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார். அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது” என்றும், “அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக. அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக! அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைத்திருப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசிபெற விழைவாராக. எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக” என்னும் வரிகள் இன்று நம் கவனத்தை ஈர்;க்கின்றன.
பொதுவாக இந்தத் திருப்பாடல் சாலமோன் மன்னனைக் குறித்தாலும், மேற்சொல்லப்பட்ட வரிகள் சாலமோனைவிட இயேசுவுக்கே அதிகம் பொருந்துகின்றன. எனவே, “மெசியாவின் திருப்பாடல்” என இதனை அழைக்கின்றனர் விவிலிய அறிஞர்கள். இதன் காரணமாகவே, உலகுக்கு மெசியா தம்மையே வெளிப்படுத்திய திருக்காட்சிப் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் இந்நாள்களில் திருச்சபை இத்திருப்பாடலைத் தன் வழிபாட்டில் இணைத்துக்கொண்டுள்ளது.
இதே உணர்வோடு. அனைத்துலகின் ஆண்டவராம் இயேசுவை நாமும் போற்றி, வழிபடுவோமாக!
மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது திருமகன் இயேசுவின் ஆட்சி இவ்வுலகிலும், எங்கள் உள்ளங்களிலும் மலர்வதாக, செழித்தோங்குவதாக, ஆமென்.
அருள்பணி. குமார்ராஜா