ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்
அரசத் திருப்பாடலான திபா 72 ஐயே தொடர்ந்து இன்றும் நாளையும் நாம் பதிலுரைப் பாடலாகப் பாடுகிறோம். “சாலமோனுக்கு உரியது” என்னும் விளக்கத்துடன் தரப்பட்டுள்ள இத்திருப்பாடல் அரசருக்காக மன்றாடப்பட்ட ஒரு வேண்டுதல்.
“தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள். சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்” என்று 10ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். ஒருவேளை சாலமோன் அரசரைப் பற்றியே இவ்வரிகள் பாடப்பட்டிருக்கலாம், காரணம் சாலமோனின் காலத்தில்தான் யூதர்களின் அரசு மிகவும் விரிவடைந்திருந்தது. சாலமோனின் புகழையும், ஞானத்தையும், வெற்றிகளையும் கேள்விப்பட்டு, பன்னாட்டு அரசர்களும் (சேபா நாட்டு அரசி உள்பட) அவரைத் தேடிவந்தார்கள். பரிசுப்பொருள்கள் கொண்டுவந்தனர் (காண்க: லூக் 11: 31).
ஆனாலும், திருப்பாடல் 2ஐப் போலவே, இந்தத் திருப்பாடலும் மெசியா இயேசுவைப் புதிய அரசராகக் காண்கிறது, அவரைப் போற்றுகிறது. “தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார். ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்” (திபா 72: 12-13) என்னும் வரிகள் சாலமோனைவிட, இயேசுவுக்கே அதிகம் பொருந்துகின்றன. எனவே, கிறிஸ்து பிறப்புக் காலத்தில், இயேசுவின் திருக்காட்சி விழாவைத் தொடர்ந்து வரும் இந்நாள்களில் திருப்பாடல் 72ஐப் பாடி இயேசுவைப் போற்றுவது சாலச் சிறந்ததே.
மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது திருமகன் இயேசுவின் பரிவுள்ளத்துக்காக உம்மைப் போற்றுகிறோம், ஆமென்.
அருள்பணி. குமார்ராஜா