ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்
பாபிலோனை ஆண்ட நெபுகத்நேசர் யெருசலேமையும், ஆலயத்தையும் தரைமட்டமாக்கினார். யூதர்களின் அடையாளம் அழிந்துபோனதாக, யூதர்கள் உணர்ந்தனர். எரேமியாவின் புலம்பல் ஆகமத்தை ஒட்டிய வசனங்கள், இதிலும் காணப்படுகிறது. மொத்தத்தில், இந்த திருப்பாடல் அழுகை, புலம்பல், வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற பாடலாக அமைந்திருக்கிறது. இதுபோன்ற தண்டனைகளுக்கு என்ன காரணம்? என்பதை சிந்தித்ததின் வெளிப்பாடு தான், இந்த திருப்பாடல்.
தங்களுக்கு நேர்ந்திருக்கிற இவ்வளவு கொடுமையான சூழ்நிலைகளுக்கு யார் காரணம்? என்பதை ஒவ்வொருவருமே, துன்ப காலத்தில் சிந்தித்து பார்ப்பது இயல்பு. அதுபோலத்தான், வளமையாக, செழிப்பாக, மகிழ்வாக வாழ்ந்த நமக்கு, திடீரென்று ஏன் இந்த துன்பம்? என்கிற கேள்விக்கான காரணத்தை, திருப்பாடல் ஆசிரியர் காண முயல்கிறார். தாங்கள் கடவுள் முன்னிலையில் நீதிமான்களாக வாழவில்லை என்றாலும், இவ்வளவு துன்பத்தை அனுபவிக்கின்ற அளவுக்கு, தவறு செய்யவில்லை என்பது, ஆசிரியரின் திடமான நம்பிக்கை. ஒருவேளை, தங்களுடைய இந்த துன்பத்திற்கு முன்னோர் செய்த பாவம் தான் காரணமோ? என்றும், அவர் எண்ணுகிறார். அப்படி இருந்தால், கடவுள் தன்னுடைய மாட்சிமையின் பொருட்டு, அதாவது கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிற மக்களுக்கு இப்படியொரு இழிநிலை வந்தால், அவர்களை கடவுளைத்தான் பரிகசிப்பார்கள் என்பதற்காகவாவது, கடவுள் மனமிரங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
நம் வாழ்விலும், துன்பங்கள் நமக்கு வருகிறபோது, அதற்கான காரணங்களை நாம் ஆராய முற்படுகிறோம். நமது வாழ்வை நாம் ஆய்வுக்கு உட்படுத்துகிறோம். சில நேரங்களில் நாம் செய்கிற பாவத்தினால், நம்முடைய சந்ததிகள் கூட பாதிக்கப்படலாம். எனவே, நமக்காக நாம் நல்ல வாழ்க்கை வாழவில்லை என்றாலும், நம்முடைய தலைமுறையினருக்காகவாவது சிறந்த வாழ்க்கை வாழ முயற்சி எடுப்போம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்