ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்
திருப்பாடல் 138: 1 – 2b, 2c – 3, 7 – 8
”ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்”
ஆண்டவருக்கு முழு மனத்துடன் நன்றி சொல்வது என்பது எது? நாம் எல்லாருமே கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். கடவுளுக்கு காணிக்கை செலுத்துகிறோம். ஆனால், எப்படிப்பட்ட மனநிலையோடு செலுத்துகிறோம்? நன்றி மனநிலையோடு கடவுளுக்கு காணிக்கை செலுத்துகிறவர்களும் குறைவு. கடவுளுக்கு நன்றி செலுத்துகிறவர்களும் குறைவு. இதற்கு அடிப்படை காரணம், எதிர்பார்ப்பு. இன்றைக்கு கடவுளைத் தேடுகிறவர்கள் எல்லாருமே எதிர்பார்ப்போடு தான் தேடுகிறார்கள். கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்கிற மனநிலையோடு கடவுளைத் தேடுகிறவர்கள் இல்லாத சூழ்நிலை தான் காணப்படுகிறது.
கடவுளுக்கு எதற்காக நன்றி செலுத்த வேண்டும்? ஏதாவது செய்தால் தானே நன்றி செலுத்த வேண்டும் என்பதான மனநிலை தான், மக்களிடத்தில் காணப்படுகிறது. ஆனால், கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட பலவற்றை நாம் பெற்றுக்கொண்டதாகவே நினைப்பது கிடையாது. அவற்றை வெகு சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். இந்த வாழ்க்கையும் சரி, நம்முடைய பெற்றோரும் சரி, நம்முடைய உடன்பிறந்தவர்களும் சரி. இவை அனைத்துமே கடவுள் நமக்கு தந்திருக்கிற கொடைகள். எவ்வளவோ அற்புதமான கொடைகளை கடவுளிடமிருந்து நாம் பெற்றிருக்கிறோம். அப்படியென்றால், எந்த அளவுக்கு நாம் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். இந்த நன்றி மனநிலை வேண்டுமென்று ஆசிரியர் அழைப்புவிடுக்கின்றார். எதிர்பார்ப்பு இல்லாமல் கடவுளிடம் செல்ல வேண்டும். எதிர்பார்த்தது கிடைக்கவில்லையென்றாலும் நாம் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். இது தான் நமது வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய செய்தி.
கடவுளை வெறும் வரங்கள் தருகிறவர்களாக மட்டும் நினைக்காமல், நம்மை அன்பு செய்கிறவராகவும் நினைக்கிற மனநிலை வேண்டுவோம். வரங்கள் தருகிறவராக மட்டும் நினைத்தால், நமக்கு தேவை ஏற்படுகிறபோது அவரை நாடுகிறவர்களாகவும், இல்லையென்றால் அவரை உதறித்தள்ளுகிறவர்களாகவும் மாறிவிடுவோம். கடவுளுக்கு எப்போதும் நன்றி செலுத்துவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்