ஆண்டவரே! என் ஒளி!
திருப்பாடல் 27: 1, 4, 13 – 14
இந்த திருப்பாடல் தாவீது அரசர் அரியணை ஏறுவதற்கு முன்னதாக எழுதப்பட்ட திருப்பாடலாகவும், அந்த வேளையில் அவர் சந்தித்த துன்பங்களுக்கு மத்தியில் எழுதப்பட்ட திருப்பாடலாகவும் பார்க்கப்படுகிறது. தாவீதின் பெற்றோர் இறந்த நேரத்தில் பாடப்பட்ட பாடலாகவும் ஒரு சிலரால் சொல்லப்படுகிறது. ஆனால், பெரும்பான்மையான யூதர்களின் எண்ணப்படி, இந்த பாடல் பெலிஸ்தியருடனான போரின் போது, தாவீது இந்த பாடலை எழுதினார் என்பது தான் அவர்களின் நம்பிக்கை. 2சாமுவேல் 21வது அதிகாரம் இஸ்ரயேலருக்கும், பெலிஸ்தியருக்கும் இடையே நடந்த போரைக் குறிப்பதாக இருக்கிறது. 17 இறைவார்த்தையில் சொல்லப்படுகிற செய்தி: இஸ்பிபெனோபு என்னும் அரக்கர் இனத்தவன் ஒருவன் தாவீதை தாக்கவிருந்ததாகவும், செரூயாவின் மகன் அபிசாய் அவருடைய உதவிக்கு வந்து அப்பெலிஸ்தியனை வெட்டிக் கொன்றான் என்றும், இறுதியில் இஸ்ரயேல் மக்கள் தாவீதிடம் வந்து, ”இஸ்ரயேலின் விளக்கு அணைந்து போகாதவண்ணம் நீர் இனி எங்களோடு போருக்கு வரக்கூடாது” என்றும் சொன்னதாகவும் இந்த அதிகாரத்தில் வாசிக்கிறோம்.
இந்த தருணத்தில் தான், தாவீது இந்த திருப்பாடலை எழுதியிருக்க வேண்டும் என்று யூதர்கள் நம்புகிறார்கள். எது உண்மையென்றாலும், அடிப்படையில் இது கடவுள் மீது அவர் வைத்திருந்த ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கடவுளை தாவீது அரசர் தன்னுடைய ஒளி என்று வெளிப்படுத்துகிறார். ஒளி என்பது வெளிச்சம் தரக்கூடியதாக இருக்கிறது. நமக்கு வழிகாட்டக்கூடியதாக இருக்கிறது. இருள் என்னும் பயத்திலிருந்து நம்மைப் போக்கி, துணிவைத்தரக்கூடியதாக இருக்கிறது. அதேபோல கடவுள் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார். துன்பங்கள் வருகிறபோது, அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கு உறுதுணையாக இருக்கிறார். நாம் அந்த ஒளியை நம்முடைய பாதைக்கு வழிகாட்டியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது நாம் சரியான பாதையில் பயணிக்கக்கூடியவர்களாக மாற்றம் பெறுவோம்.
நம்முடைய வாழ்வில் இறைவனைத் துணையாகக் கொண்டு வாழ்கிறோமா? அவருடைய வழிகாட்டுதலில் நம்முடைய பாதையை அமைத்துக்கொள்கிறோமா? அவர் நமக்குக் காட்டுகிற வழியில் நாம் செல்கிறோமா? என்று சிந்தித்துச் செயல்படுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்