ஆண்டவரே என் ஒளி
திருப்பாடல் 27: 1, 3, 5, 8 – 9
”இருளைப் பழிப்பதை விட ஒளியேற்றுவதே மேல்“ என்று பொதுவாகச் சொல்வார்கள். நாம் அனைவருமே இந்த உலகத்தில் நடக்கிற அநீதிகளைக் கண்டு பொங்கி எழுகிறோம். நமக்குள்ளாகப் பொருமிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த நிலையை மாற்றுவதற்கு நாம் ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்துவது கிடையாது. காரணம், நாமே அநீதி செய்யக்கூடியவர்களாகத்தான் இருக்கிறோம். நமக்கொரு நீதி, அடுத்தவர்க்கொரு நீதி என்று பேசக்கூடியவர்களாகத்தான் இருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் “ஆண்டவரே என் ஒளி“ என்கிற திருப்பாடலின் வரிகள், நமது வாழ்விற்கு ஒளி தருவதாக அமைந்திருக்கிறது.
ஆண்டவரை எதற்காக திருப்பாடல் ஆசிரியர் ஒளிக்கு ஒப்பிட வேண்டும்? இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் ஒளி என்பது, கடவுளின் வல்ல செயல்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. கடவுள் இஸ்ரயேல் மக்களை வனாந்திரத்தில் பகலில் மேகத்தூணைக்கொண்டு அவர்களுக்கு நிழல் கொடுத்தார். இரவில் அவர்களுக்கு ஒளியாக இருந்து இருளிலிருந்து பாதுகாத்தார். கடவுளின் ஒளியை நாம் பெற்று, நாம் மற்றவர்களுக்கு ஒளி தருவதற்கு, இந்த திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது. இந்த உலகத்தில் அநீதியை எதிர்க்க வேண்டுமென்றால், நாம் கடவுளின் ஒளியில் இளைப்பாற வேண்டும். கடவுளின் ஒளியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த ஒளியினைப் பெற்று, இந்த உலகத்திற்கு ஒளி தரக்கூடியவர்களாக நாம் மாற வேண்டும்.
இந்த உலகத்தில் நடந்துகொண்டிருக்கிற இருளின் ஆட்சியை நாம் பழித்துக்கொண்டிருந்தால், எந்த மாற்றமும் நடக்காது. மாறாக, நாம் அனைவருமே ஒளியாக மாற வேண்டும். அப்படி மாறுகிறபோது, இந்த உலகத்தில் இருள் தானாக மாறிவிடும். இந்த உலகத்தை இருளாக வைத்திருப்பதும், ஒளியாக மாற்றுவதும் நமது கையில் தான் இருக்கிறது.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்