ஆண்டவரே என் ஒளி! என் மீட்பு!
திருப்பாடல் 27: 1- 4, 13 – 14
இஸ்ரயேல் மக்கள் தங்களது வாழ்க்கையில் கடவுளை மையமாகக் கொண்டிருந்தனர். ஆண்டவர் தான் அவர்களது வாழ்வில் ஒருவராக கலந்திருந்தார். ஆனாலும், அவர்கள் செய்த தவறு, அவர்களுக்கு பல சோதனைகளையும், தண்டனைகளையும் கொடுத்தது. பகை நாட்டினரிடத்தில் போரில் தோற்றுப்போயினர். பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டனர். வேற்றுநாட்டில் பல்வேறு இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் ஆளாகினர். இப்படி துன்பங்களை அனுபவிக்கிற நேரம் தான், திருப்பாடல் ஆசிரியர் இந்த பாடலை எழுதுகிறார்.
அவரது வரிகள், நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இப்போது இருக்கிற நிலைமாறி, அனைவரும் ஆண்டவர் அருளக்கூடிய வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை, உரக்கச் சொல்கிறது. அவர்கள் வேற்றுத்தெய்வங்களையும், மனிதர்களையும் நம்பியதால் தான், இந்த இழிநிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்கள் கடவுளை நம்ப வேண்டும். கடவுள் மட்டும் தான், அவர்களின் மீட்பாக இருக்கிறார். அவர் தான் ஒளியாக இருந்து, இருளில் வழிநடத்துகிறார். எனவே, இப்படிப்பட்ட இழிநிலை மாற வேண்டும் என்ற, நம்பிக்கையோடு இருக்க, திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார்.
இன்றைக்கு நமது வாழ்க்கையில் நம்பிக்கையிழந்து போகிற சூழ்நிலையில் இந்த வார்த்தைகள் நிச்சயம் நமக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது. கடவுளின் உதவியை நாம் நாடுகிறபோது, நிச்சயம் அவர் நமக்கு உதவிசெய்வார் என்கிற நம்பிக்கை, இந்த திருப்பாடல் மூலமாக உறுதிப்படுத்தப்படுகிறது.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்